பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து, கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியது. இப்போது, கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 73 டாலராக உள்ளது. இதையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள், நாள் ஒன்றுக்கு ரூ170 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. எனவே, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி வந்தன. ‘மக்களை பாதிக்காத வகையில், விலை உயர்வு பற்றி முடிவெடுப்போம்Õ என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா கடந்த 27ம் தேதி கூறினார்.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா நேற்று சந்தித்தார். அப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் பற்றி பிரதமரிடம் முரளி தியோரா விவாதித்தார்.
பின்னர், பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரல் ஒன்று 73 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதை சற்று குறைக்கும் வகையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. எனினும், சமையல் காஸ், மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை. எண்ணெய் நிறுவனங்களுக்கு சமையல் காஸ் விற்பனையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.96.98 நஷ்டம் ஏற்படுகிறது.
பெட்ரோல், டீசலுக்கு மட்டும் விலை கட்டுப்பாட்டு முறையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகள், பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, பெட்ரோல் டீசல் விலை நள்ளிரவே உயர்த்தப்பட்டன.
Leave a Reply