பெரியாரின் சொற்பொழிவுகளை நூல்களாக பெரியார் திராவிடர்கழகம் வெளியிடுவதை தடுக்கக்கோரி பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து பெரியார் திகவினர் நூல்களை வெளியிட அனுமதி அளித்துள்ளது.
திராவிடர் கழகத்தின் நிறுவனர் பெரியார் குடியரசு பத்திரிகை நடத்தினார். இதில் 1925 முதல் 1938-ம் ஆண்டு வரை கடவுள் மறுப்புக் கொள்கை, சாதி-மதம் இல்லை, பிராமணர் எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு, தேசிய ஒருமைப்பாடு போன்றவை குறித்து எழுதி வந்தார். இதனை 27 பாகங்களாக தொகுத்து வெளியிட பெரியார் தி.க. கடந்த ஆண்டு முடிவு செய்தது.
இதையடுத்து பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் செயலாளரும், தி.க. தலைவருமான கி.வீரமணி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் “பெரியாரின் சொற்பொழிவு தொகுப்பை வெளியிட எங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. எனவே இதை பெரியார் தி.க. வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஆண்டு சொற்பொழிவு தொகுப்பை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு மீதான விசாரணை கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது.
இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி சந்துரு தீர்ப்பு வழங்கினார். அதில் கூறி இருப்பதாவது:-
பெரியாரின் பேச்சும், எழுத்தும் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் கால கட்டங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்பட்டது. அந்த கால கட்டத்தில் அவர் கருத்துக்களை தைரியமாக எடுத்துரைத்தார். காப்பிரைட் (காப்புரிமை) என்ற பெயரில் அவருடைய எழுத்தையும் பேச்சையும் முடக்கி வைக்க கூடாது. அவருடைய கருத்துக்களை வழக்கு ஆவண கட்டுக்குள் மூடி வைத்து விடக்கூடாது.
பெரியாரின் 130-வது பிறந்த நாளை கொண்டாடும் இவ்வேளையில் அவரது சொற்பொழிவு, எழுத்துக்கள் தொடர்பாக கோர்ட்டுக்கு வந்து இரு பிரிவினர் சண்டை போடுவது மிகவும் வருத்தமாக உள்ளது.
பெரியாரின் சொற்பொழிவு, தத்துவங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் எனவே பெரியார் தி.க.வுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. அவர்கள் பெரியாரின் சொற்பொழிவு தொகுப்புகளை வெளியிடலாம்.
இதற்கு எதிரான வீரமணியின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply