கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள ஆலியாளம் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது நான்கு வயது மகன் ரகு மண் குடுவையில் தங்ககாசு புதையலை கண்டெடுத்துள்ளார்.
இவர்களின் வீட்டுக்கு அருகே சின்ன சுப்பையா என்பவருக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. இதில் செடி கொடிகள் நிறைந்து காணப்படுகின்றன.
சம்பவத்தன்று சிறுவன் ரகு அந்த காலி நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது புதர் பகுதியில் மண் குடுவை ஒன்று சிறுவன் ரகு கண்ணில் பட்டது. பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த குடுவையை சிறுவன் ரகு எடுத்து பார்த்தான்.
அப்போது மண் குடுவையின் மூடி உடைந்து தங்க காசுகள் கொட்டின. இதைப் பார்த்த ரகு மகிழ்ச்சி அடைந்தான். கொட்டிய காசுகளை விட்டு விட்டு குடுவையில் இருந்த தங்க காசுகளுடன் வீட்டுக்கு ஓடோடிச்சென்றான். இதை பார்த்த ரகுவின் பெற்றோர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். அவர்களுக்கு தலை- கால் புரியவில்லை. இது பற்றி பக்கத்து வீட்டாரிடம் கூறி பெருமைப்பட்டனர். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது.
கிராம மக்கள் அனைவரும் சிறுவன் ரகு வீட்டுக்கு சென்று ஆவலோடு விசாரித்தனர். அப்போது தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்ட இடத்தை சிறுவன் ரகு கூறினான். புதையல் கிடைத்த இடத்துக்கு சென்று பார்த்தனர்.
அங்கு சில தங்க காசுகள் கீழே சிதறிக் கிடந்தன. இந்த தகவல் ஊர் முழுக்க பரவியது. கிராம மக்கள் ஓடோடிச் சென்று கிடைத்த தங்க காசுகளை அள்ளிச் சென்றனர். தங்க காசு கிடைக் காத சிலர் இதுபற்றி தாசில்தாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஓசூர் தாசில்தார் முனிராஜ் தலைமையில் துணை தாசில் தார் ஜியாவுல்லா, வருவாய் ஆய்வாளர் ரங்கப்பா, முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் சிறுவன் ரகு வீட்டுக்கு சென்றனர்.
தங்க காசு புதையல் இருந்த மண் குடுவையை பறிமுதல் செய்தனர். அதில் 37 தங்க காசுகள் இருந்தன. அவை அனைத்தும் வட்ட வடிவில் காணப்பட்டன. ஒவ்வொன்றும் அரை சென்டி மீட்டர் விட்டத்துடன் இருந்தன. தங்க காசின் ஒரு பக்கத்தில் நாமம், மற்றொரு பக்கத்தில் கோடுகள் வரையப்பட்டிருந்தன.
தங்க காசு புதையலை அதிகாரிகள் பறிமுதல் செய்த விவரம் பற்றி கேள்விப்பட்டதும் அக்கம் பக்கத்தினர் தங்களுக்கு கிடைத்த தங்க காசுகளை எளிதில் கண்டு பிடிக்க முடியாதபடி பதுக்கி வைத்துக் கொண்டனர். அதிகாரிகளும் சளைக்காமல் வேறு யாரெல்லாம் தங்க காசை எடுத்துச்சென்றார்கள். அவை எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று தீவிர வேட்டை நடத்தி வருகிறார்கள்.
அதிகாரிகள் வேட்டை ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் தங்க காசு கிடைக்காதவர்கள் தங்களுக்கு ஏதாவது தங்க காசு சிக்குமா என்ற ஆசையில் ஊர் முழுக்க தரையை தோண்டி தேட ஆரம்பித்துள்ளனர்.
தங்க புதையல் குறித்து தாசில்தார் முனிராஜ் கூறியதாவது:-
ஆலியாளம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க காசுகள் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தை சேர்ந்தது என கருதுகிறோம். ஒவ்வொரு தங்க காசும் அரை கிராம் எடை கொண்டது. மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி அப்பகுதி மக்களிடம் தங்க காசுகளை பெற்றுள்ளோம். மேலும் அப்பகுதியில் வேறு யாராவது தங்க காசுகள் வைத்துள்ளனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இங்கு கிடைக்கப்பெற்றுள்ள தங்க காசுகள் ஆய்விற்காக தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்திற்கு அனுப்பப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply