மத்திய அரசு அதிகாரிகள் ஏர் இந்தியாவில் மட்டுமே பயணம் செய்ய உத்தரவு

டெல்லி: பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உதவும் வகையில், மத்திய அரசு அதிகாரிகள் உள்நாட்டுப் பயணமாக இருந்தாலும் சரி, வெளிநாட்டுப் பயணமாக இருந்தாலும் சரி ஏர் இந்தியா விமானங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நிதியமைச்சக செய்திக்குறிப்பு கூறுவதாவது…

அனைத்து வகையான விமான பயணங்களையும் இனிமேல் அரசு நிறுவனமான ஏர் இந்தியா மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு முறைப் பயணங்களுக்கு மட்டும் இது பொருந்தும்.

ஒரு வேளை தாங்கள் செல்ல விரும்பும் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவை இல்லாவிட்டால் அந்த சேவை உள்ள அருகாமை நகரங்களுக்குச் சென்று அங்கிருந்து தாங்கள் போக விரும்பும் ஊர்களுக்குப் போக வேண்டும்.

அப்படிச் செல்லும்போது விமான பயணம் மேற்கொள்வதாக இருந்தால், ஏர் இந்தியாவுடன் கூட்டு வைத்துள்ள விமான நிறுவன விமானங்கள் மூலம் போக வேண்டும்.

அரசு நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *