பாதுகாப்புத்துறையில் படிப்படியாக அடியெடுத்து வைத்த பெண்கள் இப்போது சவால்கள் நிறைந்த எல்லை பாதுகாப்பு படையிலும் இடம் பிடித்து உள்ளனர்.
முதல் கட்டமாக பயிற்சி முடித்த 178 பெண்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கான நிகழ்ச்சி பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரில் நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டார். வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பேசிய போது, “துணை ராணுவப் படையிலும் தங்களால் பணியாற்ற முடியும் என்பதை இவர்கள் நிரூபித்து உள்ளனர்” என்றார்.
எல்லை பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் எம்.எல். குமாவத் பேசியதாவது:-
எல்லை பாதுகாப்பு படையில் பெண் காவலர்களை தேர்வு செய்யும் பணி ஜலந்தரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. மொத்தம் 8,500 பேர் படையில் சேர விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 640 பெண்கள் உடல் திறன், தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தீவிர பயிற்சிக்கு பின் முதல் கட்டமாக 178 பேர் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்திய- பாகிஸ்தான் எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
பஞ்சாபில் 553 கி.மீ. நீளமுள்ள எல்லையில் 300 சோதனை சாவடிகள் உள்ளன. இதில் பெண்களை சோதனையிடும் பணியினை இவர்கள் மேற்கொள்வார்கள் என்றார்.
பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட பெண் காவலர்களுக்கு மந்திரி ப.சிதம்பரம் பதக்கம், பரிசு வழங்கி பாராட்டினார்.
Leave a Reply