திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரி கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை (குமுளி-தேக்கடி அணை) மூலம் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை கேரளா ஏற்கவி்ல்லை.
அணை பலவீனமாக இருப்பதாகவும், இதனால் உயரத்தைக் கூட்டினால் அணை உடைந்து இடுக்கி மாவட்டமே மூழ்கிவிடும் என்று கதைவிட்டு வருகிறது. இதனால் போதிய நீரைத் தேக்கி வைக்காமல் அதை வீணாக கடலில் கலக்க விட்டு வருகிறது கேரளா. இதன்மூலம் தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது.
இந் நிலையில் பழைய அணைக்கு அருகிலேயே புதிய அணையைக் கட்டி அதன் நீர் முழுவதையும் தானே பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து ஒருமனதாக நிறைவேற்றியுள்ளன.
முன்னதாக தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன்,
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய தார்மீக கடமை, கேரளாவுக்கு உண்டு. அதே சமயம் அணைக்கு கீழ்ப்பகுதியில் வசித்து வரும் கேரள மக்களின் உயிரைப் பாதுகாப்பதும் முக்கியம்.
தற்போதைய அணை, நிலநடுக்க அபாயம் உள்ள பகுதியில் இருப்பதாக எண்ணற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இந்த அணை பாதுகாப்பு அற்றது. அணை உடைந்தால், 3 மாவட்டங்களும், அவற்றில் வாழும் 35 லட்சம் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, புதிய அணை கட்டினால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைப்பதுடன், கேரள மக்களின் உயிருக்கும் பாதுகாப்பு ஏற்படும். புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா கேட்பது புதிதல்ல. இது கடந்த 1979ம் ஆண்டு, தமிழக-கேரள அரசுகளுக்கிடையே ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம்தான்.
புதிய அணை கட்டுவது தொடர்பாக 3.5 கி.மீ. தூரத்துக்கு ஏற்கனவே ஆய்வு நடத்தி முடித்து விட்டோம். மீதி உள்ள பகுதியில் ஆய்வு நடத்துமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும், தேசிய வன உயிரின வாரியத்துக்கும் கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.
நமது மண்ணில் உள்ள அணை-அச்சுதானந்தன்:
தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் அச்சுதானந்தன்,
பொதுமக்களின் பாதுகாப்பை கருதியே, புதிய அணை கட்டுமாறு கேட்கிறோம். அணை, நமது மண்ணில் இருக்கிறது. தண்ணீரும், நம்முடையதுதான். ஆனால் நமது தண்ணீரே நம்மை கொல்லப் போகும் சூழ்நிலை நிலவுகிறது.
ஒப்பந்தப்படி, பல ஆண்டுகளாக தமிழகத்துக்கு தண்ணீர் கொடுத்து வருகிறோம். ஆனால் தண்ணீர் கொடுப்பவர்களை பற்றி தமிழகம் கவலைப்படுவதாக தெரியவில்லை என்றார்.
இதை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் உம்மன்சாண்டி ஆதரித்துப் பேசுகையில்,
தமிழகத்துடன் நல்லுறவை கருத்தில் கொண்டு இத்தீர்மானம் அமைய வேண்டும். கேரளாவுக்கு பாதுகாப்பு, தமிழகத்துக்கு தண்ணீர் என்பதே நோக்கமாக இருக்க வேண்டும். தமிழகத்துக்கு ஏதாவது கவலைகள் இருந்தால், அவற்றைக் களைய வேண்டும் என்றார்.
பின்னர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நம் மாநிலத்தில் இப்படி ஒரு தீர்மானத்தை ஒற்றுமையோடு நிறைவேற்ற முடியுமா?
Leave a Reply