ஹூஸ்டன் : அமெரிக்காவில் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மருந்தை அதிகளவில் நோயாளிகளுக்கு கொடுத்த இந்திய டாக்டர் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ ரீதியாக மோசடி செய்த இவர்களுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை அளிக்கப்பட உள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் மற்றும் பேடவுன் பகுதியில் டாக்டர்களாக வேலை பார்த்து வந்தவர்கள் அருண் சர்மா(54); இவரது மனைவி கிரண். குறிப்பிட்ட அளவில் மட்டுமே வழங்கக்கூடிய விக்கோடான் மாத்திரைகளை, ஆறு லட்சத்து 15 ஆயிரம் எண்ணிக்கையிலும், 66 ஆயிரம் சனாக்ஸ் மாத்திரைகளையும், 26 ஆயிரம் வாலியம் மாத்திரைகளையும் ஓராண்டில் இவர்கள் அளித்துள்ளனர். எட்டு மாத காலத்தில் ஒரு நோயாளிக்கு 8,000 ஹைரோகோடான் மாத்திரைகளை கொடுத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் ஹைரோகோடான் மாத்திரையை கொடுப்பதற்காக ஒரு நோயாளிக்கு 4,500 ரூபாய் வசூல் செய்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஊசி மருந்துகளை பயன்படுத்தியதாக அரசுக்கு கணக்கு காண்பித்துள்ளனர் என்று, எப்.பி.ஐ., அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.இவர்கள் வீட்டில் எப்.பி.ஐ., அதிகாரிகள் சோதனையிட்டதில் 3.15 கோடி ரூபாயும், வங்கி லாக்கரில் 3.67 கோடி ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டது.மருத்துவத் துறையில் இந்த மோசடி செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள இந்த தம்பதியருக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு சிறை தண்டனையும், ஒரு கோடியே 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
Leave a Reply