ராட்சத கடல் அலையால் தூங்காமல் தவித்த மும்பை மக்கள்

posted in: மற்றவை | 0

24_007மும்பை கடலில் இராட்சத கடல் அலை எழுந்தபடி இருந்ததால் மும்பை மக்கள் இரவு முழுவதும் உறங்கவில்லை.


மும்பையில் 2005-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந்தேதி ஒரே நேரத்தில் 94 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது.

அனைத்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மும்பை நகரமே அல்லோலப்பட்டது. இதனால் நகரம் முழுவதும் எங்கும் பீதி நிலவியது.

அதேபோன்ற பீதி நேற்று கடல் அலையால் மும்பையில் ஏற்பட்டது. மும்பை 4 புறமும் கடல் சூழ்ந்துள்ள தீவு பகுதியாகும். இதனால் நகரை சுற்றி ராட்சத கடல் அலை எழுந்தபடி இருந்தது.

நேற்று பிற்பகல் 1 1/2 மணி அளவில் ராட்சத அலைகள் எழ தொடங்கின. இரவு 7.25 மணி வரை தொடர்ந்து அலைகள் எழுந்தபடியே இருந்தது. சுமார் 5 1/2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்தது.

இதனால் கடற்கரையோரம் முழுவதும் ஊருக்குள் கடல்நீர் புகுந்தது. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் சென்று விட்டது. தெருக்களில் ஆறுபோல தண்ணீர் ஓடியது.

இதனால் மக்கள் பீதி அடைந்தனர். வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கட்டிடங்களிலும், மேடைகளிலும் ஏறி அமர்ந்திருந்தனர். மீண்டும் ராட்சத அலைகள் வரலாம் என கருதி இரவு முழுவதும் தூங்காமல் பீதியில் அமர்ந்திருந்தனர்.

ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடக்கலாம் என கருதி கடற்படை உஷார்படுத்தப்பட்டது. மாநகராட்சி மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், போலீசாரும் தயார் நிலையில் இருந்தனர்.

ஆனால் இரவுக்கு பிறகு ராட்சத அலைகள் ஏற்படவில்லை. மீண்டும் அலைகள் எழலாம் என்ற பீதி நிலவுகிறது.

இதற்கிடையே நேற்று இரவில் இருந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இதனால் 2005-ம் ஆண்டு போல பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என கருதி உஷார் நிலையில் உள்ளனர்.

வெள்ளம் ஏற்படும் என கருதப்படும் 193 இடங்களில் மோட்டார் பம்புகளும் தயார் நிலையில் உள்ளன. மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க பள்ளிக்கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அவசர தேவைக்காக ஆஸ்பத்திரிகளில் 1289 படுக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன. வெள்ளம் பாதிப்பு அதிகமாக ஏற்படும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

கடற்கரை மற்றும் தண்ணீர் அதிகம் உள்ள இடங்களுக்கு மக்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *