ரூ.800 கோடியில் எண்ணூரில் ஜெனரேட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஜப்பான் நிறுவன உதவியுடன் அமைகிறது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தொஷிபா கார்ப்பரேஷன் நிறுவனம் 40 நாடுகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 1800க்கும் மேற்பட்ட ஸ்டீம் டர்பைன்கள், ஜெனரேட்டர் பிரிவுகளை அமைத்துள்ளது. இதே போல குறைந்த செலவில் உருக்கு தயாரிக்கும் இந்திய நிறுவனமான ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம் 3400 மெகாவாட் மின் உற்பத்தி திட்டங்களை அமைத்து வருகிறது.
இந்த இரு நிறுவனங்களும் இணைந்து சூப்பர் கிரிட்டிகல் அனல் மின்நிலையங்களில் அமைக்கப்படும் 1000 மெகாவாட் வரை திறன் கொண்ட ஸ்டீம் டர்பைன், ஜெனரேட்டர் தயாரிக்க தொஷிபா ஜே.எஸ்.டபிள்யூ டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் பிரைவேட் லிமிடெட் என்னும் கூட்டு நிறுவனத்தை உருவாக்கி உள்ளன.
முதலீடு செய்வதற்கு உகந்த சூழ்நிலை, உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட தமிழகத்தை இந்த நிறுவனம் தேர்வு செய்து எண்ணூர் அருகே தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது.
ரூ.800 கோடி முதலீட்டில் 500 பேருக்கு நேரடி வேலை வேலைவாய்ப்பை இந்த நிறுவனம் அளிக்கும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழக தொழில் துறை முதன்மை செயலர் பாரூக்கி, தொஷிபா ஜே.எஸ்.டபிள்யூ நிறுவன மேலாண்மை இயக்குனர் இடாரு இஷிபாஷி கையெழுத்திட்டனர். தமிழக தலைமை செயலர் ஸ்ரீபதி, நிதித் துறை முதன்மை செயலர் ஞானதேசிகன், ஜப்பான் தூதர் காசோமினகாவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Leave a Reply