வரதட்சணை வழக்கினை சமூக நல அதிகாரியே விசாரிக்க வேண்டும் காவல் துறை தலையிடக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த வக்கீல் மாலினி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
பெண்கள் பலர் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கத்தில் அவர்கள் மீது வரதட்சணை புகார் கொடுக்கிறார்கள்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரையும், குடும்பத்தாரையும் மிரட்டுதல், துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே இந்த வழக்கில் போலீஸ் முதலிலேயே நேரடியாக தலையிடுவதை தடுக்க வேண்டும். அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்தி அதன் பிறகு உண்மை இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வரதட்சணை தொடர்பான புகாரை முதலில் மாவட்ட சமூகநல அதிகாரி விசாரிக்க வேண்டும். அதில் குற்றம் இருப்பது தெரிந்தால் வழக்கு தொடர சிபாரிசு செய்யலாம். இதற்காக மாவட்டந்தோறும் சமூகநல அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றனர்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி முருகேசன் தலைமையிலான பெஞ்ச் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை செயலாளர் சார்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் வரதட்சணை புகார்களை விசாரிக்க மாவட்டந்தோறும் சமூக நல அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து நீதிபதிகள் தீர்ப்பு கூறியதாவது:-
வரதட்சணை புகாரை விசாரிக்க மாவட்டந்தோறும் சமூகநல அதிகாரிகளை நியமித்து இருப்பதாக அரசு தெரிவித்து உள்ளது.
புகார்கள் வந்ததும் இனி அவர்கள்தான் விசாரிப்பார்கள். அவர்கள் அதிரடி சோதனை போன்றவற்றையும் நடத்தலாம். விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் இருப்பது தெரிந்தால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய சிபாரிசு செய்யலாம். அதன்பிறகே போலீசார் இதில் தலையிடலாம். சமூகநல அதிகாரிகள் விசாரித்து முடிவு சொல்லும் வரை இதில் போலீசார் தலையிடக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Leave a Reply