புதுடில்லி: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக இத்தாலி நிறுவனத்திடமிருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது கட்சித் தலைவர்கள் பலர், ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரசாரம் செய்தனர். போதிய அளவில் ஹெலிகாப்டர் கிடைக்காமல், வாடகை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
டில்லி போன்ற பெருநகரங்களில் வி.வி.ஐ.பி.,க்கள் தரைவழியாக செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, அவர்கள் ஹெலிகாப்டரில் பயணிக்க வேண்டியுள்ளது. இதற்காக, 12 ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, போயிங் நிறுவனத்திடமிருந்து வி.வி.ஐ.பி.,க்களுக்காக மூன்று ஜெட் விமானங்களை மத்திய அரசு வாங்கியது.
இத்தாலி நாட்டின், “அகஸ்டா வெஸ்ட்லேண்ட்’ என்ற நிறுவனத்திடமிருந்து இ.எச்.101 ரகத்தைச் சேர்ந்த 12 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. கண்ணி வெடிகளை அறியக்கூடிய அகச்சிவப்பு ஜாமர் கருவிகளை உள்ளடக்கிய இந்த ஹெலிகாப்டர், இருள் சூழ்ந்த பகுதிகளிலும் செலுத்தப்படக்கூடிய திறன் வாய்ந்தது. இ.எச்.101 ஹெலிகாப்டரின் இன்ஜின் அதிகபட்ச பாதுகாப்பு கொண்டது. விமானப் படையில் திறன் வாய்ந்த பைலட்கள் தான், இந்த ஹெலிகாப்டர்களை இயக்க உள்ளனர்.
Leave a Reply