அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் சமச்சீர் கல்வி

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகிறது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 1 முதல் 6ம் வகுப்பு வரை பொது பாடத் திட்டம் அமலாக்கப்படுகிறது.

அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்விமுறையை தமிழக மக்கள் [^] அனைவருக்கும் வழங்கிட வழிவகுப்போம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.

இத்திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பாமக உள்ளிட்ட கட்சிகளும் கோரி வருகின்றன. இதுதொடர்பாக போராட்டங்களும் நடந்தன.

அதன்படி தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பல்வேறு கல்வி முறைகளான நர்சரி கல்வி முறை, மெட்ரிகுலேஷன் கல்வி முறை, ஆங்கிலோ-இந்தியன் கல்வி முறை, ஓரியண்டல் கல்விமுறை, மாநில வாரியக் கல்வி முறை ஆகியவற்றை ஆய்வு செய்து அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளித்திட 8-9-2006 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் முதல்-அமைச்சர் கருணாநிதியால் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவின் பரிந்துரை உள்பட இதுதொடர்பான அம்சங்கள் பற்றி முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமலாக்கும் நடவடிக்கையை வரும் கல்வி ஆண்டு முதல் தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையை செயல்படுத்துவது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இதில், மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திட்டக்குழு துணைத்தலைவர் நாகநாதன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சமச்சீர் கல்வி குழு உறுப்பினர்கள் மற்றும் துறைகளின் செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சமச்சீர் கல்வி முறையை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட முத்துக்குமரன் குழுவின் பரிந்துரைகள் பற்றியும்-அதை செயலாக்குவதற்காக அமைக்கப்பட்ட விஜயகுமாரின் பரிந்துரைகள் பற்றியும்-அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பற்றி வெளிமாநிலங்களுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை அறிந்து 25.8.2009 அன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை பற்றியும் நீண்ட விவாதம் நடைபெற்றது.

அதன்பிறகு, இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:

சமச்சீர் கல்வி முறையை அமலாக்க;

– தற்போதுள்ள அனைத்து கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து ஒரு பொது கல்வி வாரியத்தை உருவாக்க வேண்டும்.

– வரும் கல்வியாண்டில் (2010-2011) முதல் வகுப்பிலும் 6-ம் வகுப்பிலும் பொது பாடத்திட்டம், பாடநூல்கள் உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

– வரும் 2011-2012-ம் ஆண்டில் பிற வகுப்புகளுக்கும் பொது பாடத்திட்டத்தையும் பாட நூல்களையும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

– பயிற்று மொழியாக தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிறமொழிகளும் தொடர வேண்டும்.

இந்த முடிவுகளை அடுத்து 29.8.2009 அன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *