நியூயார்க்: காக்னிஸைன்ட் நிறுவனம் அமெரிக்காவின் பீனிக்ஸ் கிளையில் பிபிஓ பணிகளை துவக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 100 அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளது.
உலகின் முன்னணி தகவல் தொழிலிநுட்ப நிறுவனங்களில் ஒன்று காக்னிஸைன்ட். அமெரிக்காவில் 10 இடத்தில் கிளைகளை பரப்பியுள்ளது. மேலும், இந்தியா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் கிளையில் டெவலப்மென்ட், மெயின்ட்டனன்ஸ், டெஸ்டிங் உள்ளிட்ட சேவைகளுடன் தற்போது கூடுதலாக பிபிஓ சேவைகளையும் வழங்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்காக அடுத்த 12 மாதத்துக்குள் சுமார் 100 முழுநேர அமெரிக்க பணியாளர்களை வேலைக்கு அமர்த்த இருக்கிறது. இதையடுத்து இந்த கிளையில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 400 ஆக உயரும் என கூறப்படுகிறது.
இது குறித்து நிறுனவத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரான்சிஸ்கோ டி சவுசா கூறுகையில்,
அமெரிக்காவின் ஒரு பெரிய சுகாதார நிறுவனத்துக்காக இந்த பிபிஓ சேவைகளைத் துவக்குகிறோம். இதன்மூலம் அமெரிக்காவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் விரும்பும் சேவைகளை உடனடியாக செய்து கொடுக்க முடியும் என்றார்.
பொதுவாக ஊழியர்களுக்கு ஆகும் குறைந்த செலவு காரணமாக அனைத்து பிபிஓ சேவைகளும் இந்தியா போன்ற நாடுகளில்தான் நடைபெற்று வருகின்றன. ஆனால், அமெரிக்கர்களை கொண்டு அமெரிக்காவில் பிபிஓ பணிகளை மேற்கொள்ளப் போவதாக காக்னிஸைன்ட் அறிவித்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply