வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் சாப்ட்வேரை அமெரிக்காவில் விற்பனை செய்யக் கூடாது என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக 2 மாத அவகாசத்தையும் அது கொடுத்துள்ளது.
இந்த சாப்ட்வேர் தொழில்நுட்பம், காப்புரிமையை மீறும் வகையில் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உலக அளவில் மிகவும் பாப்புலரான எம்.எஸ். ஆபிஸ் சாப்ட்வேர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் இந்த சாப்ட்வேர் உலகளவில் 3 பில்லியன் டாலர் அளவுக்கு விற்னையானது.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் மற்றும் எக்ஸ்எம்எல் சாப்ட்வேர்கள் தங்களது தயாரிப்புகளை காப்பி அடித்து உருவாக்கப்பட்டவை என்று கனடாவைச் சேர்ந்த ஐ4ஐ என்ற நிறுவனம் கூறி வருகிறது. இதுதொடர்பாக அது அமெரிக்காவின் டெக்சாஸ் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியோனார்ட் டேவிஸ், எம்எஸ்வேர்ட் 2003, வேர்ட் 2007 மற்றும் அதன் அடுத்தடுத்த பதிப்புகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். 2 மாதங்களுக்குள் இதை அமல்படுத்த வேண்டும் எனவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கனடா நிறுவனத்திற்கு 200 மில்லியன் டாலர் இழப்பீட்டை மைக்ரோசாப்ட் செலுத்த வேண்டும் எனவும், அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்காக மேலும் 40 மில்லியன் டாலர் அபராதத்தை செலுத்த வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து ஐ4ஐ நிறுவனத்தின் தலைவர் லெளடன் ஓவன் கூறுகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம், காப்புரிமை பெறப்பட்ட சாப்ட்வேரை இன்னொரு நிறுவனம் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றார்.
இந்த தீர்ப்பு குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
Leave a Reply