அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து அரசாங்க பணத்தில் அஸாம் தீவிரவாதிகள் ஆயுதங்கள் வாங்கியதை தேசிய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
மும்பையில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து தீவிரவாதம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அமைக்கப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கும், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கும் இடையே உள்ள தொடர்பை முதல் வழக்காக என்.ஐ.ஏ. விசாரித்தது. அசாமில் டி.எச்.டி. இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவனிடம் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை என்.ஜ.ஏ. அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, தீவிரவாதியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசின் வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
மேலும் நடத்திய விசாரணையில், தீவிரவாதிகளுடன் அதிகாரிகள், அரசியல்வாதிகள், கான்டிராக் டர்கள் கூட்டுக் கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது. உயிருக்கு பயந்தும், ஊழல் செய்யும் நோக்கிலும் அரசு பணத்தை தீவிரவாதிகளிடம் அவர்கள் கொடுத்துள்ளனர்.
இதுபோல் அரசு பணம் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை அமெரிக்க டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பி தீவிரவாதிகள் ஆயுதங்கள் வாங்கி உள்ளனர். அதில் ஒரு பங்கை அதிகாரிகள், அரசியல்வாதிகள் பங்கிட்டுள்ளனர். இந்த பணத்தை பயன்படுத்தி தீவிரவாத தலைவர்கள் சொகுசு வாழ்க்கை நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்ததாக மிஜோரம்மை சேர்ந்த 2 பேரை கொல்கத்தாவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களை டெல்லிக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்
Leave a Reply