இந்தியாவை துண்டாட சீனா பயங்கர சதி!

posted in: உலகம் | 0

டெல்லி: நமக்கு பெரும் சவாலாக விளங்கி வரும் இந்தியாவை, துண்டு துண்டாக சிதறச் செய்ய வேண்டும் என்று சீன அரசின் இணையத் தளத்தில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இந்த கட்டுரைக்குக் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவின், சர்வதேச திட்டமிடல் ஆய்வுக் கழகம் என்ற நிறுவனத்தின் (இது அரசுத் துறையாகும்) இணையதளத்தில் (iiss.cn) ஏப்ரல் 8ம் தேதி இந்த கட்டுரை வெளியிடப்பட்டு்ள்ளது. அதில், இந்தியாவை எப்படியெல்லாம் உடைக்கலாம் என்று விலாவாரியாக விளக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்டுரையின் சில பகுதிகள்…

இந்தியாவை உடைக்க வேண்டும் என்று சீனா விரும்பினால், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளை தன்னுடன் கூட்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் உல்பா தீவிரவாத அமைப்புக்கு முழு ஆதரவு தர வேண்டும். அஸ்ஸாமைப் பிரிக்க வேண்டும் என்பதே உல்பாவின் நோக்கம். அதேபோல நாகா தீவிரவாதிகளையும் சீனா முழுமையாக ஆதரிக்க வேண்டும்.

மேலும், மேற்கு வங்கத்தைப் பிரிக்க வங்கதேசத்தை சீனா ஆதரிக்க வேண்டும். அதேபோல தமிழர்களையும் ஆதரித்து அவர்களை வைத்தும் நாட்டைத் துண்டாடலாம்.

இறுதியாக, தெற்கு திபெத்தில் உள்ள 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனா கைப்பற்றலாம். (அருணாச்சல் பிரதேச மாநிலத்தைத்தான் தெற்கு திபெத் என்கிறது இந்த கட்டுரை)

உண்மையில் இந்தியா என்ற ஒரு நாடு உலக வரலாற்றில் முன்பு இருந்ததில்லை. இந்து மதம் என்ற ஒரு பிடிப்பின் கீழ்தான் இந்தியாவில் உள்ள பகுதிகள் இணைந்துள்ளன. ஆனால் இந்து மதம் ஜாதீயத்தைத்தான் போதிக்கிறது.

ஆசிய அளவில் சீனா பெரும் வல்லரசாக வளர வேண்டுமானால், சீனாவின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமானால், அஸ்ஸாமியர்கள், தமிழர்கள், காஷ்மீரிகள் ஆகிய மூன்று இனத்தவரை துணைக்கு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் இந்தியாவை துண்டு துண்டாக பிரிக்க முடியும்.

இவர்களைப் பிரித்து தனித் தனி நாடுகளாக மாற்றி விட்டால் இந்தியா பலமிழந்து போய் விடும்.

இப்படி இந்தியாவை 20 அல்லது 30 துண்டுகளாகப் பிரித்து விட்டால் இந்தியா என்ற ஒன்றே இல்லாமல் போய் விடும். அது சீனாவுக்கு மிகவும் பலமான ஒன்றாக அமையும்.

இப்படிப் போகிறது அந்த கட்டுரை.

தமிழர்களை வைத்து இந்தியாவைப் பிரிக்கலாம் என்று சீனத் தரப்பில் கருத்து வெளியிடப்பட்டிருப்பது பெரும் அபத்தமாக தோன்றினாலும் கூட, சீனா தற்போது இந்தியாவை சுற்றி வளைத்து (இலங்கை அரசுக்கு ஆயுத உதவி, இலங்கையில் கடற்படைத் தளம் அமைப்பது போன்ற செயல்கள்) மேற்கொண்டு வரும் பல்வேறு செயல்கள் அவர்களின் எண்ணம் குறித்த அச்சத்தை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது உண்மை.

பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்துடன் சீனா, நெருங்கிய உறவை வைத்துக் கொண்டு வருகிறது. உல்பா உள்ளிட்ட வடகிழக்கு தீவிரவாத அமைப்புகளுக்கு சீனா ஆதரவு தந்து கொண்டிருக்கிறது.

இதை விட முக்கியமாக அருணாச்சல் பிரதேச மாநிலம் முழுமையும் தங்களுக்கே சொந்தம் என்றும் அது பகிரங்கமாக கூறி வருகிறது. அதை தென் திபெத் என்றும் அது கூறி வருகிறது.

சீனாவின் இந்த விஷமத்தனமான கட்டுரைக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற கட்டுரைகள், செய்திகள் இரு நாட்டு உறவுகளைப் பாதிக்கும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஆனால், இதுகுறித்து வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது ஒரு தனி நபர் கருத்து போல தோன்றுகிறது. இதற்கு சீனாவின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இருப்பதாக தெரியவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *