இந்திய ரஷ்ய கூட்டு முயற்சியில் சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட அதிநவீன பீரங்கிகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ரஷ்ய நாட்டுடன் இணைந்து, பீஷ்மா என்ற பெயரில் புதிய வகை பீரங்கிகளை தயாரிக்கும் பணியில் சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை(எச்விஎப்) ஈடுபட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட டி90 வகை பீஷ்மா பீரங்கி, கடந்த 2004 ஜனவரி 7ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இப்போது 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில், பல புதிய தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய டி90எஸ் வகை பீஷ்மா பீரங்கிகளை எச்விஎப் தொழிற்சாலை தயாரித்துள்ளது. இந்த பீரங்கிகளை நாளை மறுதினம் சென்னையில் நடைபெறும் விழாவில், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். விழாவில் ரஷ்ய நாட்டு பிரதிநிதிகள், கனரக வாகன தொழிற்சாலை நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
பீஷ்மா பீரங்கியில் ஏவுகணைகளை ஏவும் வசதி, விமான எதிர்ப்பு ஏவுகணைகள், எந்த தளத்திலும் பயணிக்கும் வசதி, வெப்பம், வேதி, உயிர் ஆயுதங்களில் இருந்து தற்காத்து கொள்ளும் வசதி என பல நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இவற்றை பீரங்கிக்குள் கணிப்பொறி மூலம் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் முடியும். மேலும் 100 பீஷ்மா பீரங்கிகளை தயாரிக்கும் திட்டமும் உள்ளது.
ஏற்கனவே ஆவடி எச்விஎப் தொழிற்சாலை, விஜயந்தா, அஜய், அர்ஜுன் என பல வகையான நவீன பீரங்கிகளை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது.
Leave a Reply