கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது பெண்களுக்கு உள்ள 33 சதவீத இடஒதுக்கீட்டை, 50 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் புதுமையை ஏற்படுத்தும் இந்த அதிரடி முடிவை அரசு எடுத்தது.
உள்ளாட்சி அமைப்புகளான ஊராட்சிகளில், தற்போது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் தகவலை அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், நிருபர்களிடம் பேசிய அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார். இதற்காக அரசியல் சட்டத்தின் 243 வது “டி’ பிரிவில் திருத்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. தற்போதுள்ள 33 சதவீத இட ஒதுக்கீட்டில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது அதிகரிக்கப்பட்ட 50 சதவீதத்திலும் தொடரும். தற்போதுள்ள ஊராட்சி அமைப்புகளில் 28.18 லட்சம் பதவிகளில் 36 சதவீதம் வரை பெண்கள் பதவி வகிக்கின்றனர். இனி அது 50 சதவீதமாக அதிகரிக்கப்படும் பட்சத்தில், கூடுதலாக 14 லட்சம் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விரைவில், நகராட்சி மற்றும் மாநகராட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கடன் சலுகை: மத்திய அமைச்சரவை நேற்று எடுத்த மற்றொரு முடிவில், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்து மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடனின் முழு வட்டித் தொகையையும், அரசே செலுத்த முடிவு செய்யப்பட்டது. மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் தற்போது கல்விக் கடன் வழங்கப்படுகிறது. ரூ.45 ஆயிரம் கோடி வரை வழங்கப்படும் கல்விக்கடன் மூலமாக, நாடு முழுவதும் 14 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். இந்த கடன் பெறும் மாணவர்கள், படிப்பு முடிந்து ஓராண்டுக்கு கடனை செலுத்த வேண்டியதில்லை. வட்டியை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும். மாணவரின் தந்தையின் ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சத்திற்குள் இருந்தால் மட்டுமே, இச்சலுகை பொருந்தும். ஓராண்டுக்கு பிறகு கடனுக்குரிய வட்டி வீதத்தை மாணவர்களே செலுத்த வேண்டும். இந்த கடன் வட்டிச் சலுகை ஒரு மாணவருக்கு ஒரு தடவை மட்டுமே அளிக்கப்படும். இதற்கான நடைமுறைகள் கனரா வங்கியுடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
திருச்சியில் ஐ.ஐ.எம்., : ரூ.166 கோடி ஒதுக்கீடு: தமிழகத்தில் திருச்சி உட்பட நாட்டில் நான்கு இடங்களில், புதிதாக ஐ.ஐ.எம்., எனப்படும் நிர்வாக மேலாண்மை உயர்கல்வி மையங்கள் அமைக்க ரூ.166 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஐ.ஐ.எம்., எனப்படும் நிர்வாக மேலாண்மை உயர்கல்வி மையங்கள் ஏற்கனவே ஆமதாபாத், பெங்களூரு உட்பட ஏழு இடங்களில் அமைந்திருக்கின்றன. தற்போது மேலும் நான்கு இடங்களில் ஐ.ஐ.எம்., மையங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் திருச்சி, ஜார்க்கண்டில் ராஞ்சி, சட்டீஸ்கரில் ராய்ப்பூர், அரியானாவில் ரோடக் ஆகிய நான்கு இடங்களில் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.166 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரே தவணையாக ரூ.135 கோடி அளிக்கப்படும். மீதி ரூ.31 கோடி ஆண்டுதோறும் இந்த நான்கு மையங்களுக்கும் வழங்கப்படும். இந்த நான்கு மையங்களிலும் 2010-11ம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை துவங்கும்.
Leave a Reply