சென்னை : “முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால், துணைவேந்தராக பதவியில் நீடிக்கலாமா?’ என சென்னை ஐகோர்ட் கேள்வி கேட்டுள்ளது. கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான வழக்கில், ஐகோர்ட் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது. வரும் 31ம் தேதி அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வக்கீல் சிவபாண்டி என்பவர் தாக்கல் செய்த மனு:கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன், அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் புதிய தனியார் பொறியியல் கல்லூரிகள் துவங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.இத்திட்டத்தின் கீழ் பிரகார் அறக்கட்டளைக்கு, கல்லூரி துவங்க அனுமதித்தார். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்களாக துணைவேந்தரின் மனைவி அமிர்தா சஞ்சீவி, மாமியார் கமலம் உள்ளனர். இதன் பெயரில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. ஆன்-லைன் தேர்வு முறையில் டெண்டர் கோருவதிலும் முறைகேடு செய்துள்ளார்.அதிகார துஷ்பிரயோகம் செய்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது குறித்து, மே 30ம் தேதி கவர்னர், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினேன். எனது புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். துணைவேந்தர் பதவியில் தொடர ராதாகிருஷ்ணனுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை தலைமை நீதிபதி கோகலே அடங்கிய, “முதல் பெஞ்ச்’ விசாரித்தது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.இம்மனு, தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி டி.முருகேசன் அடங்கிய “முதல் பெஞ்ச்’ முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் சீனியர் வக்கீல் என்.ஆர்.சந்திரன், துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் சார்பில் சீனியர் வக்கீல் விஜயநாராயணன், அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் ராமன் ஆஜராகினர்.
கோர்ட்டில் நடந்த வாதம் வருமாறு:சீனியர் வக்கீல் சந்திரன்: துணைவேந்தர் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் பதவியில் தொடர்வது, விசாரணையை பாதிக்கும். அரசு உத்தரவு அல்லது கோர்ட் உத்தரவு மூலம் அவர் பணியில் தொடர்வதைத் தடுக்க வேண்டும்.
தலைமை நீதிபதி: முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால், துணைவேந்தர் பதவி வகிப்பவர், பதவியில் தொடரலாமா? இதுகுறித்து அரசும், துணைவேந்தரும் கருத்து தெரிவிக்க வேண்டும்.
அட்வகேட் ஜெனரல்: துணைவேந்தரை சஸ்பெண்ட் செய்ய, கோவை அண்ணா பல்கலைக்கழக சட்டத்தில் இடமில்லை என்றாலும், அரசுக்கு அதிகாரம் உள்ளது. தமிழ்நாடு பொதுப்பிரிவு சட்டப்படி, நியமன அதிகாரம் இருக்கும்போது அதை ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்கு உள்ளது. அரசின் கருத்தைக் கேட்டு, திங்கள் கிழமை கூறுகிறேன். போதுமான ஆதாரங்கள் திரப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.
சீனியர் வக்கீல் சந்திரன்: எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. நாங்கள் தருகிறோம்.
சீனியர் வக்கீல் விஜயநாராயணன்: அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறோம். இதையடுத்து, விசாரணையை 31ம் தேதிக்கு, “முதல் பெஞ்ச்’ தள்ளிவைத்தது.
Leave a Reply