மதுரை: தேர்தலில் ஓட்டளிக்கும் ஆவணமாக ரேஷன்கார்டை பயன்படுத்த அனுமதிக்க கோரிய மனுவை பத்து வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க தேர்தல் கமிஷனுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம் புல்லம்பாடியை சேர்ந்த தி.மு.க., ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபன் தாக்கல் செய்த பொது நல வழக்கு: ஏற்கனவே நடந்த பொது தேர்தல்களில் அடையாள அட்டை இல்லாதவர்கள் ரேஷன் கார்டை காட்டி ஓட்டுகளை பதிவு செய்யலாம். ஆனால் தற்போது அடையாள அட்டை இல்லாதவர்கள் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ் புத்தகம் போன்ற 13 வகையான ஆவணங்களை காட்டி ஓட்டளிக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த லோக்சபா தேர்தலில் ரேஷன் கார்டு வைத்திருந்தவர்களை ஓட்டளிக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ரேஷன் கார்டு எல்லோரிடமும் உள்ளது. எனவே ஆவணமாக கருதி ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. இம்மனு நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், துரைச்சாமி கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சுரேஷ்குமார் ஆஜரானார். தேர்தல் கமிஷன் சார்பில் பல முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டும் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.
இதை சுட்டி காட்டிய நீதிபதிகள், “”ரேஷன் கார்டை ஓட்டளிக்கும் ஆவணமாக பயன்படுத்த அனுமதி கோரிய மனுதாரர் அளித்த மனுவை தேர்தல் கமிஷன் பத்து வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,” என்றனர்.
Leave a Reply