வேலைக்கு போ என்று திட்டிய தந்தையை மகன் கழுத்தை அறுத்து கொலை செய்தான். வீட்டை கொளுத்திவிட்டு தீ விபத்து என்று நாடகமாடிய அவனை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி அருகே பட்டாபிராம் செந்தமிழ் நகர் உதயசூரியன் தெருவை சேர்ந்தவர் ஜோசப் ஜெகநாதன் (54). முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் லாரன்ஸ் (25). போட்டோகிராபர். ஜோசப்பின் மனைவி ஜெசிந்தா மேரி 2 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜோசப் கடந்த மாதம் ரிலீசானார். வீட்டில் ஜோசப்பும் மகன் லாரன்சும் வசித்து வந்தனர்.
இந்நிலையில், அவர்களது வீடு இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைத்துவிட்டு உள்ளே சென்று பார்த்தனர். படுக்கை அறையில் ஜோசப் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ஆவடி போலீசுக்கு உடனே தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லாரன்ஸ் பதற்றத்துடன் இருந்ததால் அவர் மீது போலீசுக்கு சந்தேகம் எழுந்தது.தீவிரமாக விசாரித்தனர். அப்போது லாரன்ஸ் கூறியதாவது:
வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தேன். “திருமண வயது ஆகிவிட்டது. பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றாதே. வேலைக்கு போ” என்று அப்பா கண்டித்தார். நான் சொல்வதை காதில் வாங்காமல் வாக்குவாதம் செய்தார். கோபம் வந்தது. காய்கறி வெட்டும் கத்தியை எடுத்தேன். கழுத்தை அறுத்துக் கொன்றேன்.
போலீசார் கைது செய்துவிடுவார்கள் என பயம் வந்தது. தீ விபத்தில் அவர் இறந்ததாக நாடகமாட திட்டமிட்டேன். கிச்சனில் இருந்து சிலிண்டரை ஹாலுக்கு எடுத்து வந்தேன். அப்பா உடல் அருகே வைத்து கேஸை திறந்துவிட்டேன். கொளுத்திவிட்டு வெளியே சென்றேன்.
இவ்வாறு லாரன்ஸ் கூறினார்.
இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஜோசப் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
தந்தையை மகனே கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தீப்பிடித்ததாக நாடகமாடியது பட்டாபிராமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply