இளையாங்குடி: வாக்காளர்களே காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதீர்கள். அப்படி காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டால் திரும்பத் திரும்ப கஷ்டத்தைத்தான் அனுபவிக்க நேரிடும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் அழகுபாலகிருஷ்ணனை ஆதரித்து விஜயகாந்த் நேற்று பிரசாரத்தை தொடங்கினார்.
சூராணம், கோட்டையூர், சாலைகிராமம், வண்டல், இளையாங்குடி உள்பட பல கிராமங்களில் அவர் திறந்த வேனில் சென்றபடி வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது..
இது இடைத்தேர்தல். இந்த தேர்தலில் விஜயகாந்த் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியுமா? என்று நினைக்க கூடாது. பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்று கருதுவார்கள். ஆனால் அப்படி நீங்கள் பார்க்கக்கூடாது. ஆளும் கட்சியினர் உங்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என்று பார்க்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். தி.மு.க.விற்கு ஓட்டுபோடக்கூடாது என்றார். எம்.ஜி.ஆரின் உண்மை விசுவாசிகள், தொண்டர்கள் தி.மு.க.விற்கு ஓட்டுபோடக்கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி ஜாதி, மதம், இனம், நிற வேறுபாடு இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காக நான் போராடுகிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தால் என்னால் இதை செய்ய முடியும். அந்த நம்பிக்கையில்தான் நான் போராடுகிறேன்.
இந்த ஆட்சியில் இலவச திட்டங்களை மாறி, மாறி கொடுத்ததில் நமக்கு 74 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இன்று பிறக்கும் ஒரு குழந்தைக்கு 12 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது.
மருத்துவமனையில் இலவச கலர் டிவி..
எல்லோருக்கும் இலவச கலர் டி.வி. என்று கூறினார்கள். இன்று சென்னையில் ஒரு முக்கிய மருத்துவமனையில் 5 மாடிகளிலும், தமிழக அரசின் இலவச கலர் டி.வி. உள்ளது. (இலவச கலர் டி.வி. உள்ள படத்தை பொதுமக்களிடம் காண்பித்தார்).
நான் எம்.ஜி.ஆரின் ரசிகன். எதைக்கண்டும் பயப்படமாட்டேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். யாருக்கும் நிரந்தரம் கிடையாது. ஒரு நாள் வீழ்ச்சி கண்டிப்பாக உள்ளது.
இந்த பகுதியில் வாகனமே செல்லமுடியாத அளவுக்கு ரோடு உள்ளது. நீங்கள்தான் இவர்களுக்கு ஓட்டு போட்டுள்ளீர்கள் இதை நீங்கள் மறக்கக் கூடாது. காசு வாங்கி கொண்டு வாக்கு அளித்தால் விலைவாசி குறையுமா? திரும்ப, திரும்ப கஷ்டத்தை தான் அனுபவிப்பீர்கள்.
சீனாவில் ஹெல்த் கேர் திட்டம் உள்ளது. அதை இங்கேயும் அமல்படுத்தவேண்டும் என்று ஓராண்டுக்கு முன்பே சட்டசபையில் நான் கூறினேன். ஒருவருடம் கழித்து நான் கூறிய அதே திட்டத்தை ஒரு கோடி பேருக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் என அறிவித்து செயல்படுத்தியுள்ளனர்.
காவல்துறையினர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தேர்தலில் எங்களுக்கு மட்டும் விதிமுறையை காரணம் காட்டி நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் தி.மு.க.வினர் மீது அவ்வாறு செய்வதில்லை. நான் கட்சி தொடங்கி இதுவரை 9 தேர்தலை சந்தித்துள்ளேன். கண்டிப்பாக தே.மு.தி.க. ஆட்சியை பிடிக்கும். ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்துவோம் என்றார் விஜயகாந்த்.
Leave a Reply