சென்னை அருகே தண்டவாளத்தில் மாநகர பஸ் சிக்கிக்கொண்டது. அதிகாரிகளும் ஊழியர்களும் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 45 நிமிடம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து மாநகர பஸ் “எம் 18” இன்று அதிகாலை ஆதனூருக்கு புறப்பட்டு சென்றது.
ஆதனூரில் இருந்து 7.15 மணிக்கு தாம்பரத்துக்கு வந்தது. கூடுவாஞ்சேரி ரெயில்வே கேட் அருகே வரும்போது, கேட் மூடப் படுவதற்கான ஹாரன் ஒலித்துக்கொண்டிருந்தது. கேட் மூடுவதற்கு முன்பு தண்டவாளத்தை கடந்துவிடாமல் என்று நினைத்து டிரைவர் பஸ்சை வேகமாக எடுத்தார்.
தண்டவாளத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது இரண்டு பக்க கேட்டுகளும் பூட்டப்பட்டன. இதனால் வெளியில் வரமுடியாமல் தண்டவாளத்தின் நடுவில் பஸ் சிக்கிக்கொண்டது. அப்போது மின்சார ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. இதை பார்த்ததும் பயணிகள் குதித்து ஓடினர். டிரைவரும் கண்டக்டரும் என்னசெய்வது என்று தெரியாமல் தவித்தனர்.
கேட் ஊழியர்கள் கொடுத்த தகவல்படி ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஸ்டேஷன்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அவ்வழியாக வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள்,மின்சார ரயில்கள் ஆங்காங்கே ஸ்டேஷன்களில் நிறுத்திவைக்கப்பட்டன. பின்னர், ரயில்வே கேட்டை திறந்து பஸ்சை அனுப்பினர். இதன் காரணமாக 45 நிமிடம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரயில்வே அதிகாரி கூறும்போது, “போக்குவரத்து அதிகமாக உள்ள காலை, மாலை நேரங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தவேண்டும் என்று கூடுவாஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு கடிதம் கொடுத்துள்ளோம். ஆனால், போலீசார் பணியில் ஈடுபடுவது கிடையாது” என்றார்.
Leave a Reply