சென்னை: தமிழகத்தில் சமச்சீர்கல்வித் திட்டம், அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என, முதல்வர் கருணாநிதி அதிரடியாக அறிவித்துள்ளார்.
தற்போதுள்ள மாநில பாடத் திட்டம், மெட்ரிக்., ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி., ஆகிய நான்கு போர்டுகளையும் ஒருங்கிணைத்து, பொதுக்கல்வி வாரியம் உருவாக்கப்படும் என்றும், முதல்கட்டமாக, அடுத்த கல்வியாண்டில் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பிற்கு பொதுவான பாடத்திட்டம், பாட நூல்கள் உருவாக்கி அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இதன்பின், மற்ற வகுப்புகளுக்கும் பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மாநில பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி., என நான்கு விதமான கல்வி முறைகள் அமலில் இருந்து வருகின்றன. முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள், ஒவ்வொரு போர்டிலும் ஒவ்வொரு விதமாக இருந்து வருகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மட்டும், பொதுவானதாக இருந்து வருகிறது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் இந்தக் கல்விமுறை, சமுதாயத்தில் அனைத்து தரப்பு குழந்தைகளுக்கும் தரமான, சமமான கல்வியை வழங்கவில்லை என்றும், இந்த முரண்பாடுகளை நீக்க, அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே சமமான, தரமான கல்வி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சில ஆண்டுகளாக அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வந்தன.
கடந்த 2006ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, ‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சமச்சீர் கல்வியை அமல்படுத்துவோம்’ என அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக, முதல்வர் கருணாநிதி தலைமையில், தலைமைச் செயலகத்தில் ஆக. 25ம் தேதி மாலை ஆய்வுக் கூட்டம் நடந்தது. மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன், கனிமொழி எம்.பி., மற்றும் சமச்சீர்கல்வி குழு உறுப்பினர்கள், கல்வித் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து முத்துக்குமரன் குழு அளித்த பரிந்துரைகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார் அளித்த பரிந்துரைகள், அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வெளிமாநிலங்களில் ஆய்வு செய்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஆகியவை குறித்து நீண்ட விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தின் முடிவில், அடுத்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு:
சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த, தற்போதுள்ள அனைத்து கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து, ஒரு பொது கல்வி வாரியம் உருவாக்க வேண்டும். வரும் கல்வியாண்டில் (2010-2011) முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் பொது பாடத்திட்டம், பாட நூல்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து, 2011-2012ம் ஆண்டில் பிற வகுப்புகளுக்கும் பொது பாடத்திட்டத்தையும், பாடநூல்களையும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும். பயிற்று மொழியாக, தமிழுடன், தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடர வேண்டும். இந்த முடிவுகளை அடுத்து, ஆக. 29ம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.
நேற்று எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு, 29ம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முறையாக ஒப்புதல் பெறப்பட உள்ளது. அதன்பின், சமச்சீர்கல்வி திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் துவங்கும்.
Leave a Reply