சிம்லா: பா.ஜ.,விலிருந்து ஜஸ்வந்த்சிங்கை நீக்கியது வேதனை தரும் விஷயம். அதே நேரத்தில், அது அவசியமான முடிவு,” என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
சிம்லாவில் நடந்த பா.ஜ.,வின் மூன்று நாள் உள்ளாய்வுக் கூட்டத்தில், நேற்று நிறைவுரை நிகழ்த்திய அவர் கூறியதாவது:
கடந்த 30 ஆண்டுகளாக கட்சியில் இருந்த ஜஸ்வந்த்சிங்கை நீக்கியது மன ரீதியாக வேதனை தரும் விஷயமே. இருப்பினும், கட்சியின் கொள்கைக்கு விரோதமாக அவர் தன் புத்தகத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளதால், அவரை நீக்க வேண்டியது அவசியமாகி விட்டது. நாடு பிரிவினையடைய காரணமான முகமது அலி ஜின்னாவைப் பாராட்டிய தோடு, நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலை களங்கப்படுத்தியுள்ளார்.
“ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடை செய்த சர்தார் படேலை, விமர்சித்தது எப்படி கட்சியின் கொள்கைக்கு விரோதமாகும்’ என, ஜஸ்வந்த்சிங் கேள்வி எழுப்பியுள்ளார். சர்தார் படேல் தன்னிச்சையாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தடை விதிக்கவில்லை. நேருவின் தூண்டுதலால் தடை விதித்தார். தடை விதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குப் பின், நேருவுக்கு படேல் எழுதியுள்ள கடிதத்தில், “ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு எதிராக சிறிய ஆதாரங்கள் கூட இல்லை’ என, தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்.,க்கு தடை விதித்த விவகாரத்தில், ஒரு பகுதியை மட்டுமே ஜஸ்வந்த்சிங் சொல்லியுள்ளார். மீதியை அவர் சொல்லவில்லை. 700க்கும் மேற்பட்ட சிறிய சிறிய ஆட்சிகளாக அமைந்து இருந்த இந்தியாவை, ஒன்றுபட்ட இந்தியாவாக மாற்றிய பெருமைக்குரியவர் சர்தார் வல்லபாய் படேல். அவரின் இந்தச் செயல் மிகவும் பாராட்டத்தக்கது. எந்த ஒரு நபராலும் இதைச் செய்ய முடியாது. அப்படிப்பட்டவரை ஜஸ்வந்த்சிங் களங்கப்படுத்த முற்பட்டுள்ளார்.இவ்வாறு அத்வானி கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்., காரணமா?:ஜம்மு: பா.ஜ.,விலிருந்து ஜஸ்வந்த்சிங் நீக்கப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு எந்த விதத்திலும் காரணம் இல்லை,” என, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஜஸ்வந்த்சிங் கை நீக்கியது பா.ஜ., எடுத்த முடிவு. அது அந்தக் கட்சி விவகாரம். இதற்கும் ஆர்.எஸ். எஸ்.,க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதனால், அவரின் நீக்கம் பற்றி நாங்கள் கருத்து தெரிவிக்க வேண்டியதில்லை,” என்றார்.
Leave a Reply