இலங்கை தரைப்படையின் முன்னாள் தளபதியும் கூட்டுப்படைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா செல்வதற்கு தீர்மானித்துள்ளார் என நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை நடத்தும் விதம் குறித்து அதிருப்தி அடைந்திருப்பதாலேயே அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினர் வெற்றி பெற்றதன் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்துப் பயந்த காரணத்தாலேயே ராஜபக்ச, அவரை தரைப் படைத் தளபதி பதவியில் இருந்து நீக்கிவிட்டார் என்றும் அவரது பாதுகாப்பைக் குறைத்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்னும் ஒருபடி மேலே சென்று, பொன்சேகாவின் அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்றும் அவர் தொடர்பான ஒளிப்படங்களோ கட்டுரைகளோ அரச கட்டுப்பாட்டு ஊடகங்களில் வெளியிடப்படக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு குறைவு காரணமாகவே சரத் பொன்சேகா உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுவதற்குத் தீர்மானித்திருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை இலங்கையில் உள்ள மூன்று மகா சங்கங்களையும் சேர்ந்த பிக்குகள் பிரதிநிதி குழு ஒன்று பொன்சேகாவைச் சந்தித்து அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு மகிந்தவிடம் தாம் எடுத்துக் கூறுவதாகவும் பிக்குகள் குழு உறுதியளித்துள்ளது.
அடுத்த முறை, நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான விவாதம் நடக்கும்போது சரத் பொன்சேகா விவகாரம் குறித்து ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திசநாயக்க பேசவுள்ளார்.
கூட்டுப்படைத் தளபதியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பத் திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply