நியூயார்க்: அமெரிக்காவில், டாக்சியில் தொலைந்து போன விலை உயர்ந்த பழமையான வயலின், செயற்கைக்கோள் தொடர்புள்ள ஜி.பி.எஸ்., சிஸ்டம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. நேர்மையான டாக்சி டிரைவரான இந்தியருக்கு, வெகுமதி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரிய நாட்டுக்காரரான ஹான் பின், நியூயார்க் லிங்கன் சென்டரில் உள்ள ஹம்டன்சில் இசை நிகழ்ச்சி நடத்தி விட்டு, டாக்சியில் சைனா டவுன் வந்தார். டாக்சியில் இருந்து இறங்கிய போது, பதினெட்டாம் நூற்றாண்டு தயாரிப்பான, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வயலினை மறந்து வைத்து விட்டார்.
ஓட்டுனரான இந்தியர் தல்பீர் சிங்கும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் சென்ற பிறகே, வயலினை டாக்சியில் விட்டது, ஹான் பின்னுக்கு நினைவு வந்தது. உடனே, டாக்சி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். டாக்சியில் ஹான் பின் பயணம் செய்தது, ஜி.பி.எஸ்., சிஸ்டத்தில் உறுதி செய்யப்பட்டு, அன்று மாலையே, ஹான் பின்னிடம் வயலின் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்க டாக்சிகளில் பொருள் தொலைந்து போனால், டாக்சிக்கள் சங்கத்தில் தகவல் தெரிவிக்கலாம். செயற்கைக்கோள் தொடர்புள்ள ஜி.பி.எஸ்., கருவி, ஒவ்வொரு டாக்சியிலும் பொறுத்தப்பட்டுள்ளது. அந்தக் கருவியின் பதிவுகள், சங்க கம்ப்யூட்டரில் பதிவாகும்; வீடியோ படங்களும் தெரியும்.
இதன் மூலம், பொருளை எளிதில் கண்டுபிடிக்க முடியும். ‘முன்பெல்லாம் ஏதாவதொரு பொருள் டாக்சியில் தொலைந்துவிட்டால், அது எந்த டாக்சி என்று கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். தற்போது உள்ள ஜி.பி.எஸ்., சிஸ்டம் மூலம், எந்த டாக்சியை பயணி பயன்படுத்தினார் என, எளிதில் கண்டுபிடித்து விடலாம். அப்படித்தான் வயலினும் கண்டுபிடிக்கப்பட்டது’ என, டாக்சி சங்கத் தலைவர் கூறினார். டாக்சி ஓட்டிய தல்பீர் சிங், இதற்கு முன் தன் டாக்சியில், பயணிகள் விட்டுச் சென்ற பொருட்களைப் பத்திரமாகத் திரும்ப ஒப்படைத்துள்ளார். அவர் நேர்மையைப் பாராட்டி, அவருக்கு வெகுமதி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply