விபத்தில் சிக்கி மூளை செயலிழந்த சேலம் இளைஞரின் இதயம், டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவனுக்கு பொருத்தப்பட்டது.
சேலம் ராசிபுரத்தை சேர்ந்தவர் தண்டபாணி, அப்பள வியாபாரி. இவரது மகன் தினேஷ் (22). தனியார் கம்பெனி சூப்பர்வைசராக இருந்தார்.
கடந்த 17ம் தேதி பைக்கில் ராசிபுரம் நெடுஞ்சாலையில் சென்ற போது கார் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
மேல் சிகிச்சைக்காக, சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு, பரிசோதனைகள் செய்து பார்த்ததில், தினேசுடைய மூளை செயலிழந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து, தினேஷ் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக அவருடைய பெற்றோர் டாக்டர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து உடனடியாக தினேஷின் இதயம், முகப்பேரில் உள்ள பிராண்டியர் லைப்லைன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவர் தருண்ஜெயின் (20) என்பவருக்கு பொருத்தப்பட்டது.
தினேஷின் கல்லீரல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசி (39) என்பவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. கிட்னி ஒன்று, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணனுக்கும் (49), மற்றொன்று பூந்தமல்லியில் உள்ள குமரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது.
Leave a Reply