புதுடில்லி : முந்தைய ஆட்சி காலத்தில், மத்திய ரயில்வேத் துறைக்கு சொந்தமான இடங்கள், சட்டவிரோதமாக தனியாருக்கு விற்கப்பட்டது தொடர்பாக, விசாரணை நடத்த, தற்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
முந்தைய ஆட்சியில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். இவரது அமைச்சரவை காலத்தில், ரயில்வேக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் பாரம்பரிய கட்டடங்கள் தனியாருக்கு சட்டவிரோதமாக விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
“ராஞ்சி மற்றும் புரியில் உள்ள பி.என்.ஆர். ஓட்டல்கள், நேர்மையான முறையிலேயே தனியாருக்கு மாற்றப்பட்டதா’ என ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர் ராஜின் ரஞ்சன் சிங் லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். இதேபோன்ற கேள்வியை பா.ஜ.,வின் முரளி மனோகர் ஜோஷியும் எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது: இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும். கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரயில்வே நிலங்களை பிறருக்கு விற்றதன் மூலம், 1,776.61 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. ரயில்வேயின் பல திட்டங்களுக்கு ஒதுக்க போதுமான நிதி இல்லை. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க, பயணிகளை கஷ்டப்படுத்தாமல், வேறு வழிகளில் பணம் திரட்ட முயற்சி மேற்கொள்ளப்படும். ரயில்வேக்கு, 1.13 லட்சம் ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. இவற்றில் வர்த்தக நிறுவனங்கள், ரயில்வே செயல்பாடு மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கானவைகள் கட்டப்பட்டு பயன்படுத்தப்படும். இவ்வாறு மம்தா கூறினார்.
Leave a Reply