பத்திரப்பதிவு மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் மட்டும் தமிழகத்தில் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் என்ற அளவுக்கு லஞ்சம் புழங்குகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகள் எடுத்தும், வெவ்வேறு வழிகளில் லஞ்சம் பெறுவது அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது.
அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்சமின்றி ஒரு அணுவும் அசையாது என்ற பெயரை, பதிவுத்துறை அலுவலகங்களும், ஆர்.டி.ஓ., அலுவலகங்களும் பெற்றுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசியமாக இந்தத் துறை அலுவலகங்களுக்கு சென்றே ஆக வேண்டிய நிலை இருப்பதால் எப்போதும் இந்த அலுவலகங்களில் கூட்டம் மொய்த்து வருகிறது.மாநிலம் முழுவதும் உள்ள 50 மாவட்ட பதிவு அலுவலகங்கள், 570 சார்பதிவு அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த அலுவலகங்களில் சொத்துக்களை பதிவு செய்தல், வில்லங்க சான்றிதழ் பெறுதல், நகல் எடுத்தல், திருமணப் பதிவு உள்ளிட்ட பணிகளுக்காக பொதுமக்கள் வருகின்றனர்.மாவட்ட பதிவு அலுவலகங்களில் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் தவிர கூடுதலாக “கட்டிங்’ வெட்டினால் மட்டுமே காரியம் நடக்கும்.
மாநிலம் முழுவதும் உள்ள 570 சார்பதிவாளர் அலுவலகங்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணம் புழங்குகிறது. இதன்படி நாள் ஒன்றுக்கு ஒன்றரைக் கோடி ரூபாயும், மாதத்திற்கு 20 நாட்கள் அலுவலகம் இயங்கும் நிலையில் சராசரியாக 30 கோடி ரூபாயும், ஆண்டுக்கு 360 கோடி ரூபாயும் லஞ்சப் பணம் புழங்கி வருகிறது.இதே போல, போக்குவரத்து அலுவலகங்களிலும் லஞ்சம் கொடி கட்டி பறக்கிறது. தமிழகத்தில் போக்குவரத்துத் துறையின் கீழ் 11 மண்டல சாலைப் போக்குவரத்து அலுவலகங்கள், 61 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், 49 யூனிட் அலுவலகங்கள், 20 செக்-போஸ்டுகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆர்.டி.ஓ., அலுவலகங்களை பொறுத்தவரை “கட்டிங்’ கொடுத்தால் தான் காரியம் நடக்கும் என்ற நிலை நிலவுகிறது.
வாகனப்பதிவு, லைசென்ஸ் வழங்குதல், எப்.சி., சான்றிதழ் அளித்தல், தனியார் ஆம்னி பஸ்களை கட்டுப்படுத்துதல், தனியார் பஸ்களுக்கு ரூட் வழங்குதல், கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்து வருகின்றன. ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டு லஞ்சமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.புதிய வாகனங்கள் வாங்கும்போது, சம்பந்தப்பட்ட ஏஜன்சியே பதிவை மேற்கொள்கிறது. இதற்காக இரு சக்கர வாகனமெனில் ஒரு வாகனத்திற்கு 100 ரூபாயும், காருக்கு 300 முதல் 500 ரூபாயும் லஞ்சமாக ஆர்.டி.ஓ.,க்களுக்கு வழங்கப்படுகிறது.
டிரைவிங் ஸ்கூல் மூலமாக லைசென்ஸ் பெற இரு, நான்கு சக்கர வாகனங்களுக்கு என 500 முதல் 1,000 ரூபாய் வரை ஒரு லைசென்சுக்கு லஞ்சமாக வழங்கப்படுகிறது. எப்.சி.,க்கு வரும் வாகனங்களுக்கு, வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப 2,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 20 செக்-போஸ்டுகளில் பர்மிட் வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்காக லஞ்சம் வழங்கப்படுகிறது. சராசரியாக ஒரு செக்-போஸ்டில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை லஞ்சப் பணம் புழங்குகிறது.இப்படி பல்வேறு வகைகளில் ஒரு மாதத்திற்கு 12 கோடி ரூபாய் வரை மாநிலம் முழுவதும் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் லஞ்சப்பணம் புரள்கிறது. ஆண்டுக்கு 140 கோடி ரூபாய் லஞ்சமாக புரள்கிறது.
இதன்படி, பத்திரப்பதிவு மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் மட்டும் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் லஞ்சமாக அளிக்கப்படுகிறது. இவற்றை தடுக்க அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் “ரெய்டு’ நடத்தி வருகின்றனர். ஆனாலும், புதிய புதிய நடைமுறைகளை பயன்படுத்தி லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் உள்ளனர்.இதுதவிர, மக்கள் நேரடியாக செல்லாத வணிக வரித் துறை, கூட்டுறவுத் துறை உட்பட பல்வேறு துறைகளில் இதை விட கூடுதலாக லஞ்சம் புரள்கிறது. இவற்றை எல்லாம் கணக்கிட்டால், தமிழக அரசுக்கு கிடைக்கும் ஆண்டு வரி வருவாயை விட லஞ்சப் பணம் தான் அதிகமாக இருக்கும்.
எல்லா நாளும் திருவிழா! முகூர்த்த நாட்களில் சொத்துக்களை வாங்கும் பழக்கம் பரவலாக இருப்பதால், இந்த நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிக பதிவுகள் நடக்கும். இந்த நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திருவிழா கோலத்தில் காணப்படும். பொதுமக்களுக்காக இரவு வரை கூட அலுவலர்களும், அதிகாரிகளும் “சேவை’ ஆற்றுவர். மற்ற நாட்களைக் காட்டிலும் இந்த நாளில் லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சப் பணம் ஒவ்வொரு அலுவலகத்திலும் புரளும்.ஆனால், ஆர்.டி.ஓ., அலுவலகங்களைப் பொறுத்தவரை எல்லா நாளும் திருவிழா போன்றே இருக்கிறது. முகூர்த்த நாட்கள் மட்டுமல்லாது நாள்தோறும் நிலையான “வரவு’ இத்துறையினருக்கு கிடைத்து வருகிறது.இதன் காரணமாகவே, முக்கிய நகரங்களில் ஆர்.டி.ஓ., பதவியை பிடிக்க 25 லட்ச ரூபாய் முதல் 40 லட்ச ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து பதவிகளை பிடிக்கின்றனர். இத்துறையில் கொட்டும் வசூல் மழையால் தான் இவ்வளவு பெரும்தொகை கொடுத்து, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இந்த பதவிகளைப் பெறுகின்றனர்.
பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படும் பதிவுத்துறை, ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், வருவாய்த் துறை தவிர அவர்கள் நேரடியாக பதிக்கப்படாத வணிகவரித்துறை, மருத்துவக் கல்வி மற்றும் சேவைகள் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பல துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது.இந்த வசூல் மன்னர்களை ஒழிக்க லஞ்ச ஒழிப்புத் துறையினர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள், பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது. அரசியல் செல்வாக்கு, பணபலம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சாமல், லஞ்ச விவகாரங்களை பல்வேறு துறையினரும் தொடர்ந்து வருகின்றனர்.
கம்ப்யூட்டர் மயமே தீர்வு : லஞ்சத்தைக் குறைக்க வேண்டும் என்றால் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் தொடர்பு கொள்வதைக் குறைக்கும் வகையில் விண்ணப்பித்தல், லைசென்ஸ் பெறுதல், அனுமதி பெறுதல், பதிவு செய்தல், விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும். விதிமுறைகளை வெளிப்படையாக அறிவித்து விட்டு, விதிமுறைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் கம்ப்யூட்டரே பரிசீலித்து அனைத்து அனுமதிகளையும், சான்றிதழ்களையும் வழங்கும் வகையில் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது.
பதிவுத் துறையில் தொட்டதெற்கெல்லாம் லஞ்சம் : 25 சதவீதம் அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் ஆகும் அவலம் : மாநிலம் முழுவதும் உள்ள பத்திரப் பதிவுத்துறை மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரே நாளில் நடத்திய அதிரடி சோதனைகளில், லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சப் பணம் புழங்கும் இந்த துறைகளில் லஞ்சத்தை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.சொத்துக்கள் வாங்குதல் தொடர்பான பதிவுகளை மேற்கொள்வதில்தான் அதிக அளவு லஞ்சம் புழங்குகிறது. அரசு விதிப்படி 8 சதவீதம் முத்திரைத்தாள் கட்டணமும், 1 சதவீதம் பதிவுக் கட்டணம் என 9 சதவீதம் செலுத்த வேண்டும். இவற்றிற்கு ரசீது வழங்கப்படும்.
சொத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்வதன் மூலம் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைத்து செலுத்தலாம். இந்த முறைகேட்டுக்கு ஒப்புக் கொண்டு, “கட்டிங்’ வாங்கிக் கொண்டு பதிவை முடித்துத் தருவதில் கணிசமான தொகை லஞ்சமாக கொடுக்கப்படுகிறது இவ்வாறு முறைகேடு செய்பவர்கள் மட்டும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலை மாறி, அரசு நிர்ணயித்த கட்டணம் தவிர சொத்தின் மதிப்பிற்கு ஏற்ப குறிப்பிட்ட சதவீதத்தை பதிவுத்துறை அதிகாரிகளுக்கு கப்பம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சொத்து வாங்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி காரணமாக பதிவுத் துறையினருக்கு “இனாமாக’ பொதுமக்கள் கொடுக்கத் துவங்கிய தொகை தான் இப்போது எழுதப்படாத சட்டமாக மாறி கட்டாயம் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு உருமாறியுள்ளது.
சொத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்து முறைகேடு செய்தால் தணிக்கையின் போது பிடிபடும் வாய்ப்புள்ளதால் தற்போது இவ்வகை முறைகேடு குறைந்துள்ளது. ஏதாவது ஒரு காரணம் கூறி அலைகழிக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே பெரும்பாலானோர் கேட்கும் லஞ்சத்தை கொடுத்து வருகின்றனர். குறிப்பிட்ட சொத்து பதிவு செய்யும் போது அதற்கு அரசுக்கு செலுத்த வேண்டிய 9 சதவீத கட்டணம் தவிர லஞ்சமாக கொடுக்க வேண்டிய தொகை பென்சிலில் குறிக்கப்படுகிறது. இந்த பென்சில் தொகையையும் சேர்த்து செலுத்தினால் தான், அடுத்தடுத்த செக்ஷன்களுக்கு பேப்பர் நகர்ந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவு செய்துதரப்படுகிறது.இந்த உபரித்தொகை பதிவாளரில் துவங்கி, சீல் வைக்கும் உதவியாளர் வரை பிரித்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொள்ளும் போது பிடிபடுவது இத்தகைய “பென்சில் மார்க்’ தொகைகளே. லஞ்சம், முறைகேடு தொடர்பான புகார்களில் பதிவுத் துறையினர் அதிகமாக சிக்கி விசாரணைக்கு உட்படுத்தப்படுவதால், இவர்களில் 25 சதவீதம் பேர் பணி ஓய்வு நாளில் சஸ்பெண்ட் ஆகி வருகின்றனர்.
பத்திரப்பதிவு தவிர வில்லங்க சான்றிதழ், நகல் எடுத்தல், திருமணப் பதிவு என “கொசுறு” வருமானங்களும் பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்களுக்கு கிடைத்து வருகிறது. இந்த வசூல் விவகாரங்களை கவனிக்க புரோக்கர் பட்டாளமும் பதிவுத்துறை அலுவலங்களில் முற்றுகையிட்டு காத்திருக்கின்றன.சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ஒவ்வொருநாளும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதால் இங்கு நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் புழங்கி வருகிறது. இதர அலுவலகங்களில் லஞ்சப் பணம் சற்று குறைவாக புழங்கி வருகிறது.
இதுதவிர, பத்திரப்பதிவு கட்டணத்தில் பிரச்னை ஏற்பட்டால், அதை மேல்முறையீட்டுக்கு துணை கலெக்டர் (முத்திரைகள்) என்பவருக்கு அனுப்புவர். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இந்த பதவிக்கு கடும் போட்டி இருக்கும். இந்த பதவியை பிடிப்பவர், ஒரே ஆண்டில் பல கோடி ரூபாய் சம்பாதித்துவிடுவார்.அரசுக்கு அதிகளவு செலுத்த வேண்டிய தொகைக்கு பதிலாக, இந்த அதிகாரிக்கு குறிப்பிட்ட அளவு தொகை கொடுத்தால் போதும், மிகக் குறைந்த கட்டணத்துக்கு பதிவு செய்ய அனுமதித்துவிடுவார்.
பிடிபட்டது எவ்வளவு : சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அனைத்து அலுவலகங்களிலும் கணக்கில் வராத லஞ்சப் பணம் லட்சக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் விவரம்:
Leave a Reply