பெங்களூர்: இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் ஐடி நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் இறங்கியுள்ளன.
இந்தியாவில் இதுவரை 1000 பேர் வரை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இன்னும் 2 ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியாக உயரும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடாமல் இருப்பதற்காக ஐடி நிறுவனங்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைளில் இறங்கியுள்ளன.
புனே நகருக்குப் போக வேண்டாம் என பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளன. பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு புனே செல்லும் வாய்ப்புகளை ரத்து செய்து வருகின்றன.
புனேவில் விப்ரோ நிறுவனம் மிகப் பெரிய கிளையை வைத்துள்ளது. அங்கு 9000 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் மிக மிக கவனத்துடன் இருக்குமாறு விப்ரோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதாம்.
புனே நகரில்தான் பெரும்பாலா உயிரிழப்புகளும் பாதிப்புகளும் அதிகம் இருப்பதால் புனே நகரை முற்றிலும் தவிர்த்து விடுமாறு ஐடி ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
இதுகுறித்து இன்போசிஸ் நிறுவனத் தரப்பில் கூறுகையில், புனேவில் உள்ள எங்களது மையத்திற்கு செல்வதையும், அங்கிருந்து இங்கு யாரும் வருவதையும் நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம். மிக மிக முக்கியமான பணியாக இருந்தால் மட்டுமே புனே செல்ல ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
விப்ரோ நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், மிக மிக கவனத்துடன் புனேவில் உள்ள எங்களது ஊழியர்களை நாங்கள் தொடர்பு கொள்கிறோம். தேவையில்லாத பயணத்தை நாங்கள் தவிர்த்து வருகிறோம் என்றார்.
ஜென்பேக்ட் என்ற பிபிஓ நிறுவன அதிகாரி கூறுகையில், எங்களது அலுவலகத்தின் சுற்றுப்புறத்தை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்கிறோம். தினசரி தேவையான மருந்துகளைப் பயன்படுத்தி சுகாதாரம் பாதிக்கப்படாத வகையில் கவனணாக. ஊழியர்களுக்கு தேவையான அளவுக்கு மாஸ்க்குகளையும் நாங்கள் வைக்கு இருப்பு வைத்துள்ளோம் என்றார்.
மேலும் அலுவலகத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லாத ஊழியர்களை, வீட்டிலிருந்தே வேலை பார்க்குமாறும் சில ஐடி நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகின்றனவாம்
Leave a Reply