நாட்டின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், புதிதாக விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிராமப்புற வங்கிகளின் தலைவர்கள் கூட்டத்தில் அவர் மேலும் கூறியது:
2008-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ரூ. 71 ஆயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தது. இதில் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பயனடைந்தனர். எனவே தற்போது புதிதாக விவசாயிகள் பெற்றுள்ள கடனை ரத்து செய்வது குறித்த திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை.
நாட்டின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது உண்மைதான். இதை மதிப்பிடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. வேளாண் உற்பத்தி குறைந்தாலும் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் உயரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (ஜிடிபி) இடம்பெறும் தொழில்களில் வேளாண்துறை ஐந்தாவது இடத்தில் உள்ளது. பருவமழை பொய்த்துப் போனதால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படும். இதன் விளைவாக கிராமப்பகுதிகளில் நுகர்வு குறையும். இதனால் வளர்ச்சி விகிதம் சரியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நிதி ஆண்டில் (2008 – 2009) பொருளாதார மந்த நிலை காரணமாக நாட்டின் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக சரிந்தது. நடப்பு நிதி ஆண்டில் வறட்சி காரணமாக பாதிப்பு ஏற்பட்டாலும், வளர்ச்சி விகிதம் 6 சதவீதத்துக்கு அதிகமாகவே இருக்கும் என்றார் பிரணாப்.
கிராமப்புற வங்கிகள் கூடுதலாக கடன் அளிப்பதற்கு தேவைப்படும் மூலதனம் குறித்து ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிராமப்புற வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க ஏற்கெனவே ரூ. 1,700 கோடி அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிதி அளிப்பது குறித்து குழுவின் பரிந்துரைக்குப் பிறகு முடிவு செய்யப்படும்.
கிராமப்புற வங்கிகளில் ஒருங்கிணைப்புக்குப் பிறகு தற்போது 84 வங்கிகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் பிரணாப் கூறினார்.
வானிலை பொய்த்துப் போனதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் பணவீக்கத்திலும் எதிரொலிப்பதாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தி கூறினார்.
Leave a Reply