சென்னை : “”புதிதாக 12 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்து விடும். அதன்பின், ஆசிரியர் நியமன பணிகள் துவங்கும்,” என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் 351 ஆசிரியர் பயிற்றுனர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், சென்னையில் நேற்று காலை நடந்தது. மாலையில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 351 பேருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். விழாவில் அமைச்சர் பேசுகையில், கடந்த மூன்று ஆண்டுகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு புதிதாக 12 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசின் அனுமதி கேட்டு, கோப்பு அனுப்பப் பட்டுள்ளது. அதில், 540 பேர் ஆசிரியர் பயிற்றுனர்கள். இதற்கு விரைவில் அனுமதி கிடைத்து விடும். அதன்பின், பணி நியமன பணிகள் நடைபெறும்,” என்றார். ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு அடிப்படைச் சம்பளம் 9,300, தரச் சம்பளம் 4,400 மற்றும் இதர படிகள் சேர்த்து 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். இவர்கள், ஓய்வு பெறும்போது 34 ஆயிரத்து 800 ரூபாய் பெறுவார்கள் என்றும் பணி நியமன ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply