சென்னை: “நர்சிங் பட்டயப் படிப்பில் சேர, பெண்களுக்கு மட்டுமே தகுதியுள்ளது என தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், ஆசாத் அலி என்பவர் தாக்கல் செய்த மனு:
நான் பிளஸ் 2 வகுப்பில் 61.5 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள் ளேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுகாதாரத் துறை ஓர் உத்தரவை பிறப்பித்தது. அதில், நர்சிங் டிப்ளமோ படிப்பில் சேர பெண்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பாணையில், நர்சிங் டிப்ளமோ படிப்புக்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையால், எனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் ஆண் நர்சுகளும் தேவைப்படுகின்றனர். “பெண்களுக்கு மட்டுமே தகுதியுள்ளது; அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்’ எனக் கூறுவது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே, அரசாணையை ரத்து செய்ய வேண்டும். எனக்கு விண்ணப்பம் வழங்க வேண்டும். நர்சிங் படிப்பில் சேர பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை நீதிபதி சுகுணா விசாரித்தார். அரசு தரப்பில், அரசு வக்கீல் ரவிக்குமார் வாதாடினார். நீதிபதி சுகுணா பிறப்பித்த உத்தரவு: பிரசவ வார்டுகளில் ஆண்களை பணியில் அமர்த்த முடியாது, பெண்களே அதை விரும்பாததால், ஆண்களுக்கு மகப்பேறில் பயிற்சி அளிக்க முடியவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த நிலையை மனுதாரரும் மறுக்கவில்லை. நர்சிங் டிப்ளமோ படிப்பை பொறுத்தவரை, நோயாளிகளை கவனித்துக்கொள்ள வேண்டிய பணியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மகப்பேறில் ஆண்களுக்கு பயிற்சி அளிக்க கடினமான சூழ்நிலை இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின் படி, மகப்பேறில் பயிற்சி பெறுவது சட்டப்பூர்வமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களை நர்சிங் படிப்பில் சேர்த்தால், அவர்களுக்கு மகப்பேறில் பயிற்சி அளிக்க முடியாத நிலை இருக்கும்போது, நர்சிங் படிப்பை அவர்கள் பூர்த்தி செய்ய முடியாது.
மேலும், 2045ம் ஆண்டு வரை போதுமான ஆண் நர்சுகள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தை அரசு ஆழமாக ஆராய்ந்து முடிவு எடுத்துள்ளது. ஆண் நர்சுகளின் பணி தேவையில்லை என அரசு கூறியுள்ளது. பொதுமக்கள் பார்வையிலும், சமூகநலப் பார்வையிலும், பெண்களை மட்டுமே டிப்ளமோ படிப்பில் சேர்ப்பது என அரசு எடுத்துள்ள முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பாணை செல்லும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சுகுணா உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply