பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்: இலங்கை உளவுப் பிரிவு

posted in: மற்றவை | 0

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக இலங்கை உளவுப் பிரிவு தகவலை மேற்கோள் காட்டி ஈழத் தமிழர் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலி உறுப்பினர்களில் காயமடைந்த ஒருவர் குறித்தும், நாட்டிலிருந்து தப்பி செல்ல தயாரான நிலையில் இருந்த இன்னொருவர் குறித்தும் புலிகளின் தகவல் தொடர்புகள் மூலம் தகவல்களை அறிந்துகொண்டதாக ராணுவ உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் ஒருவர் புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மான் என்று தெரிய வந்துள்ளதாம். அவரை குருவி என்ற புனை பெயரால் புலிகள் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே சமயம் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு பிரபா என்றழைக்கப்படும் விடுதலைப்புலி இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களின்படி, இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 6வது மாடியை ராணுவத்தினர் சோதனையிட்டுள்ளனர்.

எனினும் ராணுவத்தினர் அங்கு செல்லும் முன்னரே அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது. சம்பந்தப்பட்ட கொழும்பு பிரபா, தெரிவித்த இடத்தில் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவினர் இருப்பதாக தகவல்களை வழங்கியிந்தார்.

ஆனால் இந்த தகவல் வழங்கப்பட்ட சில மணி நேரத்தில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதன் மூலம் புலிகளின் உளவுப் பிரிவினர் கொழும்பு நகரில் வலுவான நிலையில் இருப்பது உறுதியாக இருப்பதாகவும் ராணுவத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

பொட்டு அம்மான் உயிருடன் இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், அவர் இலங்கையிலிருந்து தப்பி சென்றது குறித்து தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக ராணுவத் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *