போலீஸ் கமிஷனர் உத்தரவுபடிதான் வக்கீல்கள் மீது தடியடி நடத்தினோம்: முன்னாள் கூடுதல் கமிஷனர் மனு

posted in: கோர்ட் | 0

highcourt_clash_chennai‘போலீஸ் கமிஷனர் உத்தரவுபடிதான் ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் மீது தடியடி நடத்தினோம்’’ என்று உயர் நீதிமன்றத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.


கடந்த பிப்ரவரி 19ம் தேதி, உயர் நீதிமன்ற வளாகத்தில் போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் மோதல் நடந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வக்கீல் சங்க தலைவர் பால் கனகராஜ், செயலாளர் மோகன கிருஷ்ணன், தமிழ்நாடு வக்கீல் சங்க தலைவர் பிரபாகரன், பெண் வக்கீல் சங்க செயலாளர் நளினி ஆகியோர் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் சார்பில் வக்கீல் விஜயன் ஆகியோர் ஆஜராயினர்.

அப்போதைய கூடுதல் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சார்பில் (இப்போது ஐஜியாக உள்ளார்), வக்கீல் வி.செல்வராஜ் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி மீது முட்டை வீசிய வழக்கில் சம்பந்தபட்ட வக்கீல்கள், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரணடைய வந்துள்ளனர் என்று தகவல் கிடைத்தது. உடனே நான், அப்போதைய போலீஸ் கமிஷனர் கே.ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு, ‘கோர்ட் வளாகத்தில் வக்கீல்களை கைது செய்தால் பெரிய பிரச்னை வரும். எனவே, வக்கீல்களை கைது செய்ய தேவை இல்லை’ என்று கூறினேன்.

உடனே, ‘வக்கீல்களை கைது செய்ய தலைமை நீதிபதி அனுமதி கொடுத்து விட்டார். வக்கீல்களை போலீசார் கைது செய்யலாம்’ என்று கமிஷனர் கூறினார். கமிஷனர் எங்களது உயர் அதிகாரி என்பதால் அவரது உத்தரவை ஏற்றோம். அன்று பிற்பகல் 2.45 மணிக்கு கமிஷனர் தொடர்பு கொண்டு மொத்த சம்பவத்தையும் கண்காணிக்கும்படி எனக்கு உத்தரவிட்டார்.

உடனடியாக நான், 3.10க்கு ஐகோர்ட் வளாகத்துக்குள் நுழைந்தேன். 3.45 மணிக்கு கைது செய்யப்பட்ட வக்கீல்களை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். வக்கீல்களை கைது செய்ததால் ஐகோர்ட் வளாகத்தில் பதற்ற நிலை உருவானது.

இதையடுத்து, கமிஷனரை போனில் தொடர்பு கொண்டு, ‘போலீஸ் படையை வாபஸ் பெறுவது நல்லது’ என்று கூறினேன். அதற்கு, ‘போலீஸ் நிலையத்தை போலீசார் பாதுகாக்க வேண்டும். போலீஸ் படையை வாபஸ் வாங்க கூடாது’ என்று கமிஷனர் கூறினார். அதை ஏற்று இணை கமிஷனர்கள் ராமசுப்பிரமணியம், சந்திப் ராய் ரத்தோர் ஆகியோர் ஐகோர்ட் வளாகத்தில் இருந்து சம்பவத்தை மேற்பார்வையிட்டனர்.

கமிஷனர் 4.30 மணிக்கு கூடுதல் படையுடன் வந்தார். இதை பார்த்து கோபம் அடைந்த வக்கீல்களை விரட்டினோம். போலீஸ் படையை வாபஸ் பெறவேண்டும் என்று கமிஷனரை மீண்டும் கேட்டுக் கொண்டோம்.

மாலை 4.45 மணிக்கு கமிஷனர் உத்தரவின்படி கூட்டத்தை கலைக்க கண்ணீர்புகை குண்டு வீசினோம். 5.15 மணிக்கு போலீஸ் படைகள் தீயணைப்பு நிலையம் அருகே வந்து குவிந்தது. ஐகோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையம் தீப்பிடித்து எரிந்தது. வக்கீல்கள் மீது லத்திசார்ஜ் செய்யும்படி கமிஷனர் உத்தரவிட்டார். கமிஷனர் உத்தரவின்படிதான் தடியடி நடத்தினோம். முழு தடியடியையும் கமிஷனர் தலைமையேற்று நடத்தினார். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

தமிழக அரசு சார்பிலும், போலீஸ் தரப்பிலும் செப்டம்பர் 7-ம் தேதி பதில் மனுதாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *