புதுடில்லி: எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதை தடுக்க ஒரு புதுமையான நடவடிக்கையை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
எந்த பகுதியில் பணி அமர்த்தப்படுகிறாரோ அந்த பகுதிக்கு அருகே உள்ள நகரில் வீட்டை வாடகைக்கு எடுத்து, மனைவியுடன் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் வசிக்கலாம் என்பது தான் அந்த திட்டம். காவல்துறை, எல்லைப் பாதுகாப்புப்படை உட்பட பல்வேறு பாதுகாப்புப் படைகளிடையே எய்ட்ஸ் நோய் மற்றும் எச்.ஐ.வி., கிருமி பாதிப்பு பரவி வருவது அரசுக்கு கவலை அளித்துள்ளது. குறிப்பாக, எல்லைப்பாதுகாப்புப் படையினரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க, இம்மாதம் தேசிய அளவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.எப்., சி.ஐ.எஸ்.எப்., ஐ.டி.பி.பி., எஸ்.எஸ்.பி., என்.எஸ்.ஜி., மற்றும் அசாம் ரைபில்ஸ் ஆகிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். காவல்துறையினர் மத்தியில் எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி., கிருமி பரவுவதை தடுக்க செயல்முறை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், எல்லை பாதுகாப்புப் படை வீரர்களிடையே எச்.ஐ.வி., பரவுவதை தடுக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், புதுமையான ஒரு திட்டம், தங்கள் மனைவியை தாங்கள் பணியாற்றும் இடங்களுக்கு அருகில் உள்ள நகரங்களில் குடியமர்த்த வீரர்களுக்கு அனுமதி அளிப்பது.
“வீரர்களில், 299 பேருக்கு எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி., கிருமி பாதிப்பு ஏற்பட் டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், வீரர்கள் மனதளவிலும், உடலளவிலும் தகுதியுடன் இருப்பர் என்று இயக்குனர் ராமன் ஸ்ரீவத்சவா கூறினார். கடந்த நான்கு ஆண்டுகளில், எல்லைப்படையில் 273 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், கடந்த ஆண்டு மட்டும் 78 பேர் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதே போல், துணை ராணுவப் படையில் கடந்த நான்கு ஆண்டுகளில், 1,547 எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 665 பேர் கடந்தாண்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.
Leave a Reply