பஞ்ச்குலா (அரியானா):ஒரு நாள் பயணமாக அரியானா மாநிலம், பஞ்ச்குலா மாவட்டம் சென்ற, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், அங் குள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளைப் பார்வையிட்டார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந் துரையாடினார். பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பஞ்ச்குலா மாவட்டத்தில் மானக் கியா என்ற இடத்தில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு விஜயம் செய்த கபில் சிபல், அங்குள்ள வகுப்பறைகளை சுற்றிப் பார்த்தார். பள்ளி நேரத்தில் என்னென்ன பாடங்கள் படிக்கிறீர்கள் என, மாணவர்களிடம் கேட்டறிந்தார். பாடப் புத்தகங்களில் உள்ள சில பகுதிகளை வாசிக்கும்படி மாணவர்களிடம் கூறிய அவர், படிக்கும் போது அவர்கள் செய்த தவறுகளையும் திருத்தினார். உங்களுக்கு பிடித்தமான பாடம் எது என, மாணவர்களிடம் பரிவோடு கேட்டார்.
“உங்களுக்கு ஆங்கிலம் அல்லது கணிதம் அல்லது அறிவியல் பாடங்கள் பிடிக்காதா?’ என, மாணவர்களிடம் கபில் சிபல் கேட்ட போது, “எங்களுக்கு இந்தி அல்லது பஞ்சாபிதான் பிடிக்கும்’ என, அவர்கள் பதில் அளித்தனர்.
இதன்பின், ராம்காத் என்ற இடத்தில் உள்ள இடைநிலைப்பள்ளிக்கு சென்று, அதன் வளாகத்தை சுற்றிப் பார்த்ததோடு, அங்குள்ள கழிப்பறைகள் சரியாக சுத்தம் செய்யப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்தார். கழிப்பறையை சரியாக பராமரிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மொத்தத்தில், கிராமப்புற பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வித் தரம் திருப்திகரமாக உள்ளது. கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களை கற்பதிலும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அரியானா அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
Leave a Reply