மின் இணைப்பு ‘ரீடிங்’ முறையில் வருகிறது மாற்றம் : செப். 1 முதல் புதிய முறை அமல்

posted in: மற்றவை | 0

கடந்த 27 ஆண்டுகளாக வீட்டு மின் இணைப்புகளில், “ரீடிங்’ எடுப்பதற்கான நடைமுறையை மாற்ற மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. புதிய நடைமுறையை செப்டம்பர் 1ம் தேதி முதல் சென்னையில் மட்டும் பரிசோதனை முறையில் அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, பில் தொகை கட்டுவதை எளிமையாக்கும் வகையில் பல நவீன வசதிகளும் சென்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

மின் இணைப்புகளில் இரண்டு மாதங்களுக்கொரு முறை சுழற்சி முறையில் “ரீடிங்’ எடுக்கப்படுகிறது. பில் தொகையை அந்த மாதத்தில் 1ம் தேதியிலிருந்து 15ம் தேதிக்குள் மின் வாரிய அலுவலகங்களில் செலுத்திவிட வேண்டும். இது தான் கடந்த 27 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது, இந்த முறையில் மாற்றம் கொண்டு வர மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. அதாவது, ஒரு பகுதியில் மாதத்தில் 16 ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை மட்டும் “ரீடிங்’ எடுப்பது என்பதை மாற்றி, மாதம் முழுவதும், எப்போது வேண்டுமானாலும் அந்தப் பகுதியில் “ரீடிங்’ எடுக்கப்படும். “ரீடிங்’ எடுக்கப்பட்ட அடுத்த நாளிலிருந்தே மக்கள் தங்களது பில் தொகையை செலுத்தலாம்; “ரீடிங்’ எடுக்கப்பட்ட நாளிலிருந்து 20 நாட்களுக்குள் தங்களது பில் தொகையை செலுத்தி விட வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்களின் வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்படும். இந்த புதிய முறையின் மூலம் வீட்டு மின் இணைப்பு பில் தொகையை செலுத்த கூடுதலாக ஐந்து நாட்கள் அவகாசம் கிடைக்கும்.

மேலும், பொதுமக்கள் தங்களது பில் தொகையை செலுத்த மின்சார வாரிய அலுவலகங்களில் மணிக்கணக்கில் நிற்பதை தடுக்கும் வகையில், ஏற்கனவே ஆன்-லைன் மூலம் பணம் கட்டும் வசதியும், 24 மணி நேர தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, இந்தியன் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியிலும் பில் தொகையை செலுத்துவதற்கான வசதிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. இந்த வசதி அனைத்தும் தற்போது, அண்ணாசாலை மின் பகிர்மான அலுவலகத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 1ம் தேதி முதல் சென்னையின் நான்கு மின்சார வாரிய சர்க்கிள்களிலும் இந்த முறையை செயல்படுத்த மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மின்சார வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ரீடிங் முறையில் மாற்றம் செய்து, புதிய முறை அண்ணாசாலை அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்டது. இதற்கு, பொதுமக்கள் மத்தியில் ஓரளவு ஆதரவு கிடைத்தது. எனவே, செப்டம்பர் 1ம் தேதி முதல் சென்னையின் நான்கு மின்சார வாரிய சர்க்கிள்களில் மட்டும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த புதிய முறை குறித்து பத்திரிகைகள், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் நேரிடையாகவும் பொதுமக்களுக்கு விளக்கி கூற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகளவில் பயன் பெறுவர். இவ்வாறு உயரதிகாரி ஒருவர் கூறினார். இதற்கு சென்னை நகர மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அமல்படுத்தவும் மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

எங்கும்… எப்போதும்…! சென்னை மக்கள் பில் தொகை செலுத்த மின்சார வாரிய அலுவலகங்களில் மணிக்கணக்கில் நிற்க வேண்டிய அவசியமும் இனி இல்லை. காரணம், தற்போது, இந்தியன் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் மட்டும் மின்சார பில் தொகை செலுத்தும் வசதி உள்ளது. இந்த வசதியை மேலும் சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் அமல்படுத்துவது குறித்து மின்சார வாரிய தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது தவிர, சென்னையின் முக்கியமான 20 இடங்களில் 24 மணிநேர தானியங்கி இயந்திரங்களை நிறுவவும் மின்சார வாரியம் திட்டமிட்டு அதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இது தவிர அஞ்சல் அலுவலகங்களிலும் வீட்டு மின் இணைப்புக்கான பில் தொகையை செலுத்துவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இது பற்றி மத்திய தலைமை அஞ்சல் துறைக்கு மின்சார வாரியத்தின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் அடுத்த வாரத்துக்குள் கிடைத்துவிடும் என்றும் மின்சார வாரிய வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனவே சென்னை நகர மக்கள் இனி மின்சார வாரிய அலுவலகங்களில் பில் செலுத்த வரிசையில் நிற்க வேண்டியதும் இல்லை; கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டுமே என்ற டென்ஷனும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *