மும்பையில் 54 பேரை பலி வாங்கிய இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் கணவன்-மனைவி உட்பட மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து பொடா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பை கேட்டு பெண் குற்றவாளி கதறி அழுதார்.
கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியா, ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 54 பேர் பலியானார்கள். 244 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கு விசாரணை மும்பையில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பு வழங்கிய பொடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.புரானிக், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அஸ்ரப் அன்சாரி (32), சையத் அனீப் அனீஸ் (46) அவரது மனைவி பெமிதா சையத் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்தார்.
இது அரிதினும் அரிதான வழக்கு என்பதால் குற்றவாளிகள் மூவருக்கும் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகம் கோரியிருந்தார்.
குற்றவாளிகளுக்கான தண்டனையை நீதிபதி புரானிக் நேற்று அறிவித்தார். மூவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். பொடா சட்டத்தின் 3(2) வது பிரிவின் கீழும், இ.பி.கோ. 302 (கொலை), 307 (கொலை முயற்சி) மற்றும் 120-பி (சதித் திட்டம் தீட்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழும் இந்த மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
வெடி குண்டு வைத்ததற்காக கணவன்-மனைவி இருவருக்கும் பொடா நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல் முறை. அனீஸ், அன்சாரி மற்றும் குண்டுகளை தயாரிக்க மூளையாக இருந்து செயல்பட்ட ஐதராபாத்தை சேர்ந்த நசீர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்துதான் வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். அந்தேரியில் உள்ள அனீசின் வீட்டில் குண்டுகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. நசீர் பின்னர் மும்பையில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். அனீசும் அவனது மனைவி பெமிதாவும் டாக்சி ஒன்றை வாடகைக்கு பிடித்து கேட்வே ஆப் இந்தியா சென்று அங்கு வெடிகுண்டு வைத்தனர். அன்சாரி மற்றொரு டாக்சியில் ஜவேரி பஜார் சென்று குண்டு வைத்தான்.
அனீப் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது வெள்ளை நிறத்தில் குர்தா, பைஜாமா அணிந்து இருந்தான். நீதிபதியின் தீர்ப்பை கேட்டு எந்தவித சலனமும் இல்லாமல் அனீப் இருந்தான். அவனது மனைவி பெமிதாவும் அமைதியாக நின்றிருந்தார். ஆனால், நீதிமன்றத்தில் இருந்து வெளியே செல்லும்போது கதறி அழுதார்.
நீதிபதி புரானிக் தனது தீர்ப்பை வழங்கியதும் குற்றவாளிகளைப் பார்த்து உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த தண்டனை குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? எனக் கேட்டார்.
அப்போது அன்சாரி, “இந்த தீர்ப்பை நான் ஏற்கவில்லை” என்று கூறினார்.
பெமிதா கூறும்போது, “நான் எந்த தவறும் செய்யவில்லை. ஒரு பெண்ணை நீங்கள் தீவிரவாதியாக கருதுகிறீர்கள். என் குழந்தை இப்போது அனாதையாகி விட்டதுÓ என்றார்.
பெமிதாவின் வக்கீல் சுதீப் பஸ்போலா வாதிடும்போது, “சமூகத்தின் அடித்தட்டில் இருந்து வந்தவர் பெமிதா. அவருக்கு குழந்தைகள் இருக்கின்றன. அவர் ஆண் ஆதிக்கம் மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார்.
வேறு வழியேதும் இல்லாததால் கணவர் சொன்னதை மறுக்க முடியாமல் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை விதித்து இருப்பது முற்றிலும் நியாயமற்றது” என்றார்.
அனீப்பின் வழக்கீல் வகாப் கான் வாதிடுகையில், “அனீப் இதற்கு முன்பு கிரிமினல் வழக்கு எதிலும் சம்பந்தப்படவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக துபாய் சென்ற அவரை பாகிஸ்தானியர் சிலர் ஆசை காட்டியும் குஜராத் கலவரத்தின்போது முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சி.டி.க்களை போட்டுக் காட்டியும் மூளை சலவை செய்து அவரை இந்த சதி திட்டத்தில் சிக்க வைத்து விட்டனர். எனவே அனீப்புக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையை குறைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகம் பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“இந்த வழக்கு அரிதிலும் அரிதானது என்பதால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட்டது நியாயமானதே. தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு இது ஒரு பாடமாகவும் எச்சரிக்கையாகவும் அமையும்” என்றார்.
Leave a Reply