லிட்டருக்கு 100 கிமீ தரும் செவ்ரோலெட் வோல்ட் கார்: ஜிஎம் சாதனை!

posted in: உலகம் | 0

13-volt-chevrolet200வாஷிங்டன்: கார் தயாரிப்பில் நூறாண்டுகள் சாதனை கண்டு பின் திவாலாகும் நிலைக்குப் போய் இப்போது மீண்டு வந்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், கார் தயாரிப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தப் போகிறது.

இந்த நிறுவனம் இப்போது தயாரித்துள்ள செவி வோல்ட் (Chevy Volt) எனும் புதிய கார் ஒரு காலன் பெட்ரோலுக்கு 230 மைல் தருவது நிரூபணமாகியுள்ளது. அதுவும் நகர்ப்புற சாலைகளில் ஓட்டும்போதே இவ்வளவு மைலேஜ் கிடைக்கிறதாம். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 100 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது இந்தக் கார்.

இந்தக் கார் சந்தைக்கு வரும்போது விற்பனையில் பெரும் புரட்சியே நடக்கும் என நம்பப்படுகிறது. இதுவரை அமெரிக்க சாலைகளில் பலமுறை சோதித்துப் பார்த்துவிட்டார்களாம். அனைத்து விதமான சோதனை முடிவுகளும், இந்தக் காரின் குறைந்தபட்ச மைலேஜ் லிட்டருக்கு 100 கிமீ என்றே வந்துள்ளதாம்.

உலகிலேயே மூன்று இலக்க மைலேஜ் தரும் ஒரே கார் என்ற வாசகத்துடன் வெளிவரும் இந்தக் கார்தான் ஜெனரல் மோட்டார்ஸ் எனும் பழம்பெரும் நிறுவனத்தின் தலை எழுத்தையே மாற்றப் போகிறது என இந்த நிறுவனம் பெருமையுடன் கூறி வருகிறது.

இன்றைக்கு உலகிலேயே அதிக மைலேஜ் தருவது டொயோட்டாவின் பிரியஸ் கார்தான். லிட்டருக்கு 25 கிமீ தருகிறது. இதனுடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிக மைலேஜ் தரும் வாகனம் செவர்லே வோல்ட்தான். ஆனால் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை, ஏற்றப்படும் சுமையின் அளவைப் பொறுத்து இந்த மைலேஜ் வேறுபடும் என ஜிஎம் அறிவித்துள்ளது.

ரூ 20 லட்சம் வரை விலைகொண்ட இந்தக் கார்கள் வரும் 2010-ல் உற்பத்தியாகி, 2011-ல் விற்பனைக்கு வருகி்ன்றன. முதல் 40 கிமீ தூரம் வரை பேட்டரியில் பயணிக்கும் இந்தக் கார்கள் அதன் பின், பெட்ரோலுக்கு மாறிவிடும் வகையில் இன்ஜின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பேட்டரியில் இயங்கும்போது பெட்ரோல் சிறிதளவு கூட பயன்படாது. மேலும் வண்டியிலிருந்து புகையும் வராது. சுற்றுச் சூழலுக்கு மிக ஏற்ற வண்டியாகவும் இந்த மாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரை அமெரிக்கா மட்டுமின்றி, உலகம் முழுக்க விற்பனைக்குத் தரப்போகிறார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *