இந்திய வருமான வரி மற்றும் நேர்முக வரி சட்டம் 1961-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தற்போதும் வரி முறைகள் உள்ளன. அதை மாற்றி அமைத்து எளிமை படுத்துவதற்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்த பணி முடிந்து புதிய வரி விதிப்பு முறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இவற்றை நேற்று மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, உள்துறை மந்திரி ப. சிதம்பரம் ஆகியோர் டெல்லியில் வெளியிட்டனர்.
இந்த புதிய வரிமுறை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படும். பின்னர் 2011-ம் ஆண்டில் சில நடைமுறைக்கு வர உள்ளது.
புதிய வரி முறையில் வருமான வரி மற்றும் நேர்முக வரி செலுத்துவோருக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தற்போது வருமான வரியில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியது இல்லை. அதற்கு மேல் ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
ஆனால் புதிய வரிமுறைப்படி இனி ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வரி செலுத்தினால் போதும்.
இதற்கு முன்பு ரூ.3 லட்சம் வரை 10 சதவீதமும் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை 20 சதவீதமும், அதற்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீதமும் செலுத்தவேண்டும் என்று இருந்தது.
புதிய முறைப்படி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம் வரை 20 சதவீத வரியும், 25 லட்சத்துக்கு மேல் 30 சதவீத வரியும் செலுத்த வேண்டும்.
ரூ.3 லட்சம் வரையிலான சேமிப்புகளுக்கு வருமான வரி கழிவு வழங்கவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் வருமான வரி உச்சவரம்பை ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்திலேயே நீடிக்கும் படியும் பரிந்துரை செய்துள்ளனர்.
மாத சம்பளம் தவிர தரப்படும் இதரபடிகள், பயணச் சலுகைகள் ஆகியவற்றை வருமானத்துடன் சேர்த்தே வரி விதிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கம்பெனிகள் மீதான அதிகபட்ச வருமான வரி தற்போது 30 சதவீதமாக உள்ளது. இதை 25 சதவீதமாக குறைக்க பரிந்துரை செய்துள்ளனர்.
அரசு சலுகைகள் காரணமாக எந்தவித வரியும் செலுத்ததாத நிறுவனங்களும் குறைந்தபட்ச மாற்று வரி விதிக்க பரிந்துரை செய்துள்ளனர்.
வெளிநாட்டு நிறுவனங்கள் 40 சதவீதம் கம்பெனி வரி செலுத்துகின்றன. அது 25 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அவற்றின் கிளைகள் ஈட்டும் வருமானத்துக்கு 15 சதவீதம் வரி விதிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் புத்தக கணக்கில் காட்டும் வருமானத்தின் மீது தற்போது 15 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக அந்த நிறுவனங்கள் நிகர சொத்து மதிப்பில் 2 சதவீதம் குறைந்தபட்ச வரி விதிக்கவும் பரிந்துரை செய் துள்ளனர்.
ஓய்வு கால சேமிப்புகளுக்கான வரி விதிப்பும் ரத்து செய்யப்படுகிறது. நீண்ட கால முதலீடு பயன்பாட்டு வரி மீண்டும் கொண்டு வரப்படுகிறது. பங்கு பரிவர்த்தனை வரி ரத்து செய்யப்படுகிறது.
Leave a Reply