வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்று எந்த கட்சியும் நிரூபிக்கவில்லை: தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி

posted in: மற்றவை | 0

ec_navinchawlaமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்பதை இதுவரை யாராலும் நிரூபிக்க முடியவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கூறினார்.


“இ.வி.எம். எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும். எனவே இதை மாற்றி விட்டு பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்” என்று அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இந்த புகாரை நிரூபித்துக் காட்ட நேரில் வருமாறு தேர்தல் கமிஷன் விடுத்த அழைப்பை இந்த கட்சிகள் ஏற்க மறுத்து வருகின்றன. பா.ஜ. கட்சி நிரூபிக்க முயன்று தோல்வி அடைந்து விட்டது. இந்த நிலையில், இந்த புகாரை நிரூபித்துக் காட்ட 27ம் தேதி இன்னொரு வாய்ப்பை தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.

இதற்கிடையில், மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவை தேர்தல் ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவும் மற்ற இரு ஆணையர்களும் நேற்று மும்பை வந்தனர்.

இந்த ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நவீன் சாவ்லா கூறியதாவது:

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை இதுவரை யாராலும் நிரூபிக்க முடியவில்லை. தேர்தலில் ஒவ்வொரு தனி நபரின் ஓட்டும் ரகசியமானது. வாக்குச் சீட்டு முறையை கொண்டு வந்தால் இந்த ரகசியம் கெட்டு விடும். ஜனநாயகத்தின் முக்கிய அம்சமே தனிநபர் வாக்கு ரகசியம்தான். சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கு இது முக்கியமானது.

மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 22ல் வெளியிடப்படும்.

இவ்வாறு நவீன் சாவ்லா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *