திருச்சி: திருச்சியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், 13 ஆண்டுகளாக பள்ளிக்கு வராமல் ஊழியர் ஒருவர் சம்பளம் வாங்கி மோசடி செய்த விஷயம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருச்சி வண்ணாரப்பேட்டையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவது சி.இ., மேல்நிலைப்பள்ளி. அரசு உதவியுடன் நடத்தப்படும் சிறுபான்மையினர் பள்ளியில், 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியின் மேலாளராக இருந்து வரும் ஜேம்ஸ் ஆப்ரகாம் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இவருடைய மகன் பிராங்க்ளின் ஜேம்ஸ் என்பவர் தான் பள்ளியின் தாளாளர். ஜேம்ஸ் ஆப்ரகாமின் மகள் பியூலா (48) பள்ளியில் எழுத்தர் பணியில் 15 ஆண்டுகளுக்கு முன் நியமனம் செய்யப்பட்டார்.
அவர் 1996ம் ஆண்டு முதல் தன் கணவர் சேகருடன் நாகர்கோவிலில் உள்ள மிஸ்பா என்கிற ஜெபவீட்டுக்கு சென்றுவிட்டார். 1996ல் வெளியூர் சென்றுவிட்ட பியூலா தன் வேலையை ராஜினாமா செய்யாமல் சென்றுள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக அவர் பள்ளியில் வேலைபார்த்து வருவது போல், போலி கையெழுத்து போட்டு மாதம், மாதம் சம்பளத்தை பள்ளி நிர்வாகி ஜேம்ஸ் ஆப்ரகாம் அரசிடம் இருந்து பெற்று வந்துள்ளார். இந்த மோசடி விவகாரம் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி நிர்வாகத்துக்கும், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் நடந்து வரும் பனிப்போரின் விளைவாக வெளியே கசிந்தது.
பணியில் இல்லாமல் அரசிடம் இருந்து போலி கையெழுத்து போட்டு சம்பளம் பெற்றுவந்த மோசடி குறித்து சமீபத்தில் மாவட்ட கல்வித்துறைக்கு புகார் வந்தது. சில வாரங்களுக்கு முன், பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் திடீர் சோதனை நடத்தினார். பணிக்கு வராமல் பியூலா பெயரில் மாதம், மாதம் சம்பளம் பெறப்பட்ட விஷயம் நிரூபணமானது. இதுகுறித்து, பள்ளி நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கடிதம் அனுப்பியுள்ளார்.
பள்ளி நிர்வாகமோ தவறு நடந்தது உண்மை என்று ஒப்புக் கொண்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறுகையில், “பள்ளியில் 12 ஆண்டுக்கும் மேலாக பணிக்கு வராத எழுத்தர் கையெழுத்தை போலியாக போட்டு அரசை ஏமாற்றி சம்பளம் பெற்றுள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். மோசடியாக பெற்ற சம்பள பணத்தை திரும்ப கட்ட பள்ளி நிர்வாகம் ஒத்துக் கொண்டுள்ளது. இவ்விஷயத்தில், மேல்நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.’ என்றார்.
Leave a Reply