சென்னை: சென்னையை அடுத்து, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரில், வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதில், இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஒரு பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கிழக்கு கடற்கரையில் உள்ள பனையூர். கடற்கரை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் ஏராளமான பங்களாக்கள் உள்ளன. இங்கு, 11வது அவென்யூவில் குடியிருப்பவர் இளங்கோவன் (65). கப்பலில் கேப்டனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரமணி (62). இவர்களது மகன் வித்யாசங்கர் (40). இவர், பிரான்சில் உள்ள ஒரு கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
வித்யாசங்கர் மனைவி வசந்தி (34). இவர்களது குழந்தைகள் பிரவீன் (12), பிரியங்கா (8). வித்யாசங்கர் குடும்பத்துடன் பிரான்சில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், வசந்தியும், குழந்தைகள் பிரவீன் மற்றும் பிரியங்கா ஆகியோர், பனையூரில் உள்ள இளங்கோவன் வீட்டிற்கு வந்து தங்கினர். நேற்று மாலை 5 மணிக்கு இளங்கோவன், ரமணி, வசந்தி, குழந்தைகள் பிரவீன் மற்றும் பிரியங்கா ஆகியோர் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கார் ஒன்று வந்து வீட்டின் முன் நின்றது.
அதில் இருந்து கையில் துப்பாக்கியுடன் இறங்கிய நபர், இளங்கோவன் வீட்டிற்குள் நுழைந்தார். இளங்கோவன், ரமணி மற்றும் வசந்தி ஆகியோரை நோக்கி “படபட’ என சுட்டார். இளங்கோவன், ரமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். வசந்தியின் கழுத்தில் ஒரு குண்டு பாய்ந்தது. இதைத் தொடர்ந்து, தனது கையில் இருந்த கத்தியால் குழந்தைகள் இருவரின் கன்னத்திலும் மர்ம மனிதன் கீறினான். அவர்கள் கன்னத்தில் இருந்து ரத்தம் வழிந்தது. வெளியில் கார் வரும் சத்தம் கேட்கவே, மர்ம மனிதன் வீட்டில் இருந்து வெளியேற முயன்றான்.
அப்போது, வசந்தியின் சகோதரி அங்கு காரில் வந்து இறங்கினார். அவரையும் துப்பாக்கி காட்டி மிரட்டிய மர்ம நபர், “பேசாமல் உள்ளே போய்விடு’ என்று கூறிக் கொண்டே அங்கிருந்து ஓடத் துவங்கினான். இதை பார்த்த வசந்தியின் சகோதரியின் டிரைவர் முருகானந்தம், காரில் இருந்து வேகமாக இறங்கி, அந்த நபரை துரத்தினார். அருகில் இருந்த பொதுமக்களும் அந்த மர்ம நபரை துரத்தத் துவங்கினர். தலைதெறிக்க ஓடிய மர்ம நபர், அருகில் இருந்த ஒரு “முட்டுச் சந்தில்’ ஓடினார்.துரத்திக் கொண்டு ஓடிய டிரைவர் முருகானந்தம், அந்த நபரை பாய்ந்து பிடித்தார்.
பொதுமக்களும் அந்த நபர் ஓட முடியாமல் சூழ்ந்து கொண்டனர். பின்னர், அந்த நபரை நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரை விசாரித்ததில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த அவர் பெயர், ராஜன் என்று தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மர்ம நபர் சுட்டதால் இறந்து போன இளங்கோவன் மற்றும் ரமணி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கழுத்தில் குண்டு பாய்ந்ததால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வசந்தி, அடையாற்றில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த வீட்டை, சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், அடையாறு துணை கமிஷனர் திருஞானம் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் அங்கு சோதனை மேற்கொண்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தனி நபரால் செய்யப்பட்டதா, அல்லது கும்பல் எதுவும் சம்பந்தப்பட்டுள்ளதா என்று விசாரணை நடந்து வருகிறது.
மிகவும் அமைதியான குடியிருப்பு பகுதியான பனையூரில் நடந்துள்ள இந்த பயங்கர சம்பவம் அப்பகுதி மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. கொலைக்கான காரணம் என்ன?: இளங்கோவன் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டுக் கொன்ற நபர் அங்கிருந்த நகைகளையோ, பணத்தையோ எடுத்துச் செல்லவில்லை. வீட்டில் இருந்தவர்களை கொலை செய்யும் ஒரே நோக்கத்தோடு நுழைந்துள்ளது தெரிகிறது. மேலும், ராஜன், விலை உயர்ந்த காரில் வந்துள்ளார். இது, போலீசாரை சந்தேகப்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாகவோ, குடும்பப் பிரச்னை காரணமாகவோ இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
Leave a Reply