அரசு ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு தவிர, ஆண்டுக்கு 25 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டும், கூடுதலாக ஆந்திர முதல்வர் மரணம் போன்றவற்றுக்காக அவ்வப்போது விடுமுறை அளிப்பதால், அரசுப் பணிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. மற்ற ஊழியர்களைப் போலவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, வாரம் ஒரு நாள் தான் விடுமுறை விடப்பட்டு வந்தது. வேலை நாட்களில், அலுவலகங்களில் ஆகும் செலவுகளைக் குறைக்க, சனி, ஞாயிறு என, வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதன்படி, ஆண்டுக்கு 104 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடுகிறது.
இதுதவிர, ஜனவரி முதல் தேதி புத்தாண்டு தினத்தில் துவங்கி பல்வேறு பண்டிகைகள் மற்றும் பிறந்த நாட்களுக்காக, ஆண்டுக்கு 25 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டில், இரண்டு முறை மொகரம் பண்டிகை வந்துள்ளது. அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்கள் தவிர, ஓணம் பண்டிகைக்காக, நான்கு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதுதவிர, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கும் திடீர் விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழை போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் போன்றவற்றுக்காகவும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இப்படி, ஆண்டுக்கு 150 நாட்கள் வரை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கிடைத்துவிடுகிறது.
இவ்வளவு விடுமுறை நாட்கள் தேவைதானா என்ற கேள்வி எழுந் துள்ளது. கடந்த ஆட்சியில், ஐந்துக்கும் மேற்பட்ட விடுமுறை நாட்களை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா குறைத்தார். மொகரம், மீலாது நபி போன்ற பண்டிகைகளுக்கு இஸ்லாமியர்கள் மட்டும் விடுமுறை எடுத்துக்கொள்ளவும், அதற்கு பதிலாக கிருஷ்ண ஜெயந்தி போன்ற நாட்களில் அவர்கள் பணியாற்ற வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது. தற்போதைய அரசு, மீண்டும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. இந்த விடுமுறை நாட்களை ஒட்டி சனி, ஞாயிறு கிழமைகள் வந்தால், தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்துவிடுகிறது. இதனால், அரசு ஊழியர்கள் கூடுதலாக ஒன்றிரண்டு நாட்கள் சேர்த்து விடுமுறை எடுத்து, சொந்த ஊர் சென்றுவிடுகின்றனர். இதனால், வாரத்துக்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் வராமல் இருக்கும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.
இவ்வாறு, தொடர்ச்சியாக விடுமுறைகள் கிடைப்பதால், அரசு பணிகள் பெரிதும் முடங்குகின்றன. குறிப்பாக, மக்கள் நேரடியாக தொடர்புகொள்ளும் பணிகளில், பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது, அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவை அரசு விமர்சையாக கொண்டாடத் துவங்கியதும், அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. இந்த நிலையை அரசு மாற்ற வேண்டும். இயற்கை சீற்றங்கள் போன்ற காரணங்களுக்காக விடுமுறை அளிப்பதில் தவறு இல்லை. ஆனால், மற்ற காரணங்களுக்காக விடுமுறை அளிப்பது, அரசுப் பணிகளை முடக்கவே செய்யும்.
மற்ற மாநிலங்களில் “கம்மி’: மத்திய அரசு ஊழியர்களுக்கும், மற்ற மாநில ஊழியர்களுக்கும், தமிழக ஊழியர்களை விட குறைவான நாட்களே விடுமுறை அளிக்கப்படுகிறது. மத்திய அரசு விடுமுறையைப் பொறுத்தவரை, குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய மூன்று நாட்கள் தான் கண்டிப்பாக விடுமுறை விட வேண்டியவை. எனினும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மூன்று நாட்கள் உட்பட தீபாவளி, விஜயதசமி, புனித வெள்ளி, கிறிஸ்துமஸ், மீலாது நபி உட்பட 14 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகின்றன. இதுதவிர, தசரா, ஹோலி, ராமநவமி, யுகாதி, பொங்கல், ஓணம், விநாயகர் சதுர்த்தி போன்ற பல்வேறு பண்டிகை நாட்களில் இருந்து ஏதாவது மூன்று நாட்கள் மட்டும் அந்தந்த மாநில அளவில் தேர்வு செய்து விடுமுறை அளித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்தமே 17 நாட்கள் தான் விடுமுறை.
இதேபோல, ஆந்திரா மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் விடுமுறைகளான குடியரசு, சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி தவிர 12 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. இதன்படி, அம்மாநில ஊழியர்களுக்கு மொத்தம் 15 நாட்கள் தான் விடுமுறை அளிக்கப்படுகிறது. கர்நாடகா அரசு ஊழியர்களுக்கு 22 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை விட அதிகளவில் விடுமுறை பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை நாட்களைத் தவிர கூடுதலாக அவ்வப்போது விடுமுறை அளிப்பது, மக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.
Leave a Reply