புதுடில்லி:பயங்கரவாத சவால்களை சமாளிக்க, நாட்டில் உள்ள 16 ஆயிரம் போலீஸ் நிலையங்களையும், ஒரே நெட்வொர்க்கின் கீழ் கொண்டு வரும், இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம், வரும் 2011-12ம் ஆண்டு செயல்பட துவங்கும் என, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அதே போன்று, கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததும், தேசிய பல்முனைப் பயன்பாடு அடையாள அட்டை, 110 கோடி இந்தியர்களுக்கும் வினியோகிக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சிறு தொழில் முனைவோர் மாநாட்டை துவக்கி வைத்து கூறியதாவது:கிரைம் அண்ட் கிரிமினல் நெட் வொர்க் சிஸ்டம்(சி.சி.டி.என்.எஸ்.,) உருவாக்க பணியாற்றி வருகிறோம். இதன் மூலம், நாட்டில் உள்ள 16 ஆயிரம் போலீஸ் நிலையங்களும், ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள முடியும்.இந்த சி.சி.டி.என்.எஸ்., செயல்பட துவங்கி விட்டால், பயங்கரவாதம் தொடர்பான அச்சுறுத்தல்களை திறமையாக சமாளிக்க முடியும்.
அமெரிக்காவை போன்று, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை உருவாக்க, தொழில் நுட்ப அறிஞர்கள் அரசுக்கு உதவ வேண்டும். எனவே, தொழில்முனைவோர்களின் நடவடிக்கை, நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் திறமையை அதிகரிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும். பயோமெட்ரிக் அடையாள அட்டையின் சோதனை திட்டம் வெற்றிகரமாக முடிந்ததும், இந்தாண்டு, அத்திட்டத்தின் கீழ், 3,331 கிராமங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகியவை கொண்டு வரப்படும்.
தேசிய பல்முனைப் பயன்பாடு அடையாள அட்டை வழங்குவதற்காக, 110 கோடி இந்தியர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அது நிறைவடைந்ததும், ஒவ்வொரு இந்தியருக்கும், தனி அடையாள எண் வழங்கப்படும். இந்த தனி அடையாள எண், வருமான வரி, சுங்க வரி, ரேஷன் கார்டு, முதியோர் ஓய்வூதியம் உட்பட பலவேறு பயன்பாட்டிற்கும் பொருந்தும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
Leave a Reply