ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு ஐகோர்ட் ‘அபராதம்’: நீதிபதி நாகமுத்து அதிரடி உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை: “தகுதி மதிப்பெண்ணுக்கு குறைவாக எடுத்தவர்களைச் சேர்த்ததால், ஒவ்வொரு மாணவருக்கும் தலா 5,000 ரூபாய் வீதம், புதுச்சேரி அரசிடம், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் செலுத்த வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்களை சேர்க்க, பிளஸ் 2 வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என, தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டுக்கு, தகுதி மதிப்பெண்ணை 50 சதவீதமாக ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் உயர்த்தியது. ஆனால், ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களை மாநில அரசுகள் தளர்த்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியது. இதையடுத்து, தகுதி மதிப்பெண் 45 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வந்தது. மத்திய, மாநில அரசு விதிகளின்படி, மதிப்பெண்ணை தளர்த்திக் கொள்ள தேசிய கவுன்சில் உத்தரவிட்டது. ஆனால், ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, மதிப்பெண் வரம்பை தளர்த்தி, புதுச்சேரி அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் 45 முதல் 50 சதவீத மதிப்பெண்களை எடுத்த மாணவர்களை புதுச்சேரியில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் சேர்த்தன. இவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஒப்புதல் அளிக்க, புதுச்சேரி அரசிடம் விண்ணப்பித்தன. ஆனால், ஒப்புதல் வழங்க புதுச்சேரி பள்ளி கல்வித்துறை மறுத்து விட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், புதுச்சேரியில் உள்ள ஆசிரியர் பயற்சி பள்ளிகள் மனுக்கள் தாக்கல் செய்தன. இதை நீதிபதி நாகமுத்து விசாரித்தார்.

ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் சார்பில் சீனியர் வக்கீல் என்.ஆர்.சந்திரன் மற்றும் வக்கீல்கள் ஆர்.சுரேஷ்குமார், ரபுமனோகர், கண்ணன் மற்றும் புதுச்சேரி அரசு சார்பில் வக்கீல் மாலா ஆஜராகினர். மனுக்களை விசாரித்த நீதிபதி நாகமுத்து, பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசை பொறுத்தவரை, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5 சதவீத மதிப்பெண்களை தளர்த்தியும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரைப் பொறுத்தவரை, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என உள்ளது.

புதுச்சேரி அரசைப் பொறுத்தவரை, விதிகளை தளர்த்தி இதுவரை உத்தரவு பிறப்பிக்கவில்லை. மதிப்பெண்களைத் தளர்த்துவதற்கு மாநில அரசுகள் கண்டிப்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஆகவே, 2007-08ம் ஆண்டுக்கு, மதிப்பெண்களை தளர்த்துவது தொடர்பான விதிமுறைகளை இப்போதாவது புதுச்சேரி அரசு தளர்த்தி உத்தரவிட வேண்டும். கடந்த 2007-008ம் ஆண்டு 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தவர்கள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐகோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்த மனுக்களை தள்ளுபடி செய்தால், மாணவர்களின் நலன் பாதிக்கப்படும். ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் செய்த தவறுக்கு, இரண்டு ஆண்டுகள் படித்த மாணவர்கள் துன்புறக் கூடாது. மதிப்பெண் வரம்பை தளர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை என நன்றாக தெரிந்தும், இந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்கள் சேர்த்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா 5,000 ரூபாய் வழக்கு செலவுத் தொகையாக புதுச்சேரி அரசுக்கு செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தும்பட்சத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு 5 சதவீத மதிப்பெண்களை தளர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன்பின், மாணவர்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த உத்தரவு 2007-08ம் ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த உத்தரவை எதிர்காலங்களில் ஒரு முன்னுதாரணமாக கொள்ளக் கூடாது. இவ்வாறு நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *