ஆஸ்திரேலியாவில் போலி கல்வி நிறுவனங்களை நம்பி மாணவர்கள் ஏமாறுவதை தூதரகங்கள் தடுக்க வேண்டும்:சுப்ரீம் கோர்ட் கருத்து

posted in: உலகம் | 0

புதுடில்லி: “போலி கல்வி நிறுவனங்களை நம்பி இந்திய மாணவர்கள் ஏமாறுவதை தடுக்க, இந்திய தூதரகமும், ஆஸ்திரேலிய தூதரகமும் உதவ வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.

“ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். சமீப காலமாக இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. ஒரு சிலர், இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். கவர்ச்சி விளம்பரங்களைப் பார்த்து இந்திய மாணவர்கள் பலர், ஆஸ்திரேலியாவில் உள்ள போலி கல்லூரிகளில் சேர்ந்து ஏமாற்றமடைகின்றனர். இதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் குறிப்பிடுகையில், “ஆஸ்திரேலியாவில் உள்ள போலி கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இந்திய மாணவர்கள் அவதிப் படுவதை தடுக்க அங்குள்ள இந்திய தூதரகமும், இங்குள்ள ஆஸ்திரேலிய தூதரகமும் உதவ வேண்டும். ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கு தேவையான விதிமுறைகள் விளக்கப்பட வேண்டும்’ என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வாகன்வதி குறிப்பிடுகையில், “வெளியுறவுத் துறை அமைச்சகம், ஆஸ்திரேலிய கல்லூரிகள் பட்டியலை, “வெப்சைட்’டில் வெளியிட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனங்களை மட்டுமே, மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்’ என்றார்.

போதுமான பணத்துடன் வர வேண்டும்: இந்திய பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கல்வித்துறை அமைச்சரும், அந்நாட்டு துணை பிரதமருமான ஜூலியா கிலார்ட் கூறியதாவது:ஆஸ்திரேலியா மிகவும் பாதுகாப்பான நாடு. சமீப காலமாக இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இனவெறியோடு நடத்தப்பட்டது அல்ல. சில சமூக விரோதிகள் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கோடு, இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.இருப்பினும் வெளிநாட்டு மாணவர்களை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளதால், போலீஸ் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். போலீஸ் பணிக்கு கூடுதலாக ஆட்களை தேர்வு செய்துள்ளோம்.

இந்திய மாணவர்களும், ஆஸ்திரேலிய அரசின் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வெப்சைட்டை பார்த்து அதில் பட்டியலிடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும். ஆஸ்திரேலியா வருவதற்கு முன், படிக்கும் காலத்தில் தேவைப்படும் நிதி தேவை குறித்தும் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியா வந்த பின், போலி கல்வி நிறுவனங்களில் சேர்ந்து அவதிபடக்கூடாது. இது குறித்து இந்திய பிரதமர் மற்றும் கல்வித்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.

வெளிநாட்டு மாணவர்களின் நலனை பாதுகாப்பதற்காக மாணவர்களை கொண்ட ஆலோசனைக் குழுவை அமைக்க, ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் ஏற்பாடு செய்துள்ளார்.இந்த குழு அளிக்கும் ஆலோசனைகளை அரசு பரிசீலிக்கும். ஆஸ்திரேலியா வரும் இந்திய மாணவர்கள், தூதரகங்களில் அவர்களை பற்றிய முழு தகவல்களை அளிக்க வேண்டும். இவ்வாறு ஜூலியா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *