புதுடில்லி : “அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத் தில் கையெழுத்திடாத இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய முடியாது’ என, ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய கல்வித்துறை அமைச்சரும், துணை பிரதமருமான ஜூலியா கிலார்ட், நம்நாட்டில் ஒரு வாரம் பயணம் மேற்கொண்டார். நேற்று தாயகம் திரும்பும் போது, டில்லியில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத எந்தவொரு நாட்டுக்கும் அணுசக்திக்கு தேவையான பொருளை சப்ளை செய்வதில்லை என்பதை நாங்கள் ஒரு கொள்கையாகவே கொண்டிருக்கிறோம். எனவே, இந்தியாவுக்கு யுரேனியத்தை சப்ளை செய்ய முடியாது. ராணுவ தளவாடங்கள் தொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியாது. இந்த ஒப்பந்தத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். அது மட்டுமல்லாமல், இந்த கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு சம்பந்தப் பட்ட எந்த நாடும் ஆர்வம் காட்டவில்லை. எனவே, எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் இந்தியாவுடன் நேரடியாக ஒப்பந்தம் மேற்கொள்வதையே விரும்புகிறோம்.
ஆஸ்திரேலியாவில் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு அபரிமிதமாக உள்ளது. இதை சப்ளை செய்யத் தயாராக இருக்கிறோம். கல்வித்துறையில் ஏற்கனவே ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட் டுள்ளது. இதை தவிர தொழில் நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ள ஆஸ்திரேலியா விரும்புகிறது. ஒரு சில மாதங்களில் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத், இந்தியப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது, முக்கியத்துறைகளில் அவர் ஒப்பந்தம் மேற்கொள்வார். இவ்வாறு ஜூலியா கூறினார்.
Leave a Reply